ரத்தன் Tata என்போமே மாஸ்.. தமிழகத்தில் 250 ஏக்கரில் iPhone ஃபேக்டரி.. குட்டி சிட்டி ரெடி.. 50000 வேலை வாய்ப்பு
டாடா குழுமத்தின் தலைவர் மற்றும் உரிமையாளரான ரத்தன் டாடா (Ratan Tata), தொழில்துறையில் அவரொரு ஜாம்பவான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வரும் நவம்பர் 2024 ஆம் மாதத்திற்குள், இந்தியாவில் புதிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது. அதேபோல், இதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பும் கணிசமாக அதிகரிக்கும் என்று கூரப்பட்டுள்ளது. இந்த ஐபோன் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு வரப்போகிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறது என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில வருடங்களாக சீனாவை புறக்கணித்து, மற்ற நாடுகளில் அதன் ஐபோன் உற்பத்தியை துவங்கி வருகிறது. இதில் இந்தியா ஒரு முக்கிய நாடாக திகழ்கிறது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, ஆப்பிள் தனது நான்காவது ஐபோன் அசெம்பிளி யூனிட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஓசூரில் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 250 ஏக்கரில் iPhone ஃபேக்டரி.. இல்லை இல்லை குட்டி சிட்டியே ரெடி ஆகுதா?
ஐபோன்கள் தயாரிப்பதற்காக 250 ஏக்கரில் புதிய தொழிற்சாலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics) அமைக்கவுள்ளது. இந்த புதிய தொழிற்சாலை ரூ.6,000 கோடி முதலீட்டில் உருவாகவுள்ளது. இது ஒரு சிறிய டெக் சிட்டி (Small Tech City) போல உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 50,000-திற்கும் அதிகமான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் பெண்களாக வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
250 ஏக்கரில் உருவாக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட் சிட்டியில் (Smart City) பல புதிய அம்சங்களை டாடா நிறுவனம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, புதிதாக நிறுவப்படவுள்ள ஐபோன் தொழிற்சாலையில் வேலையில் சேரும் ஊழியர்களுக்கு வசதியாக தங்கி பணிபுரிய உதவும் வகையில், சிறிய - சிறிய வீடுகளும் கூட இங்கே அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் ஊழியர்களை தொழிற்சாலைக்கு தினசரி சென்று வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரத்தன் Tata என்போமே மாஸ்.. ஐபோன் உற்பத்தியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து அசத்தல்:
கடந்த ஆண்டு, டாடா எலக்ட்ரானிக்ஸ் விஸ்ட்ரான் (Wistron) நிறுவனத்திடம் இருந்து இந்திய தொழிற்சாலையை வாங்கியது. இந்தியாவில் ஐபோன்கள் (iPhone) தயாரிக்கப்படும் இரண்டாவது இடமாக இந்த புதிய தொழிற்சாலை அமையும். ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உதிரிபாகங்கள் மற்றும் ஐபோன்களை நிறுவனம் இப்போது தயாரித்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் 2017 இல் இந்தியாவில் போன்களைத் தயாரிக்கத் தொடங்கியது. ஃபாக்ஸ்கான் (Foxconn) முதலில் சென்னைக்கு அருகில் ஐபோன்களை உற்பத்தி செய்தது. அதன்பிறகு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இப்போது, டாடா குழுமம் இந்த துறையில் நுழைவதன் மூலம், ஆப்பிள் இப்போது இந்தியாவில் அதிக ஐபோன்களை தயாரிக்க முடியும், இது நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








