ரயில்வேயின் பொங்கல் பரிசு.. ரயில்ஒன் செயலி மூலம் டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் தள்ளுபடி.. விட்றாதீங்க..
இந்திய ரயில்வே அமைப்பு (Indian Railways) தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்ஒன் (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை வாங்கும் பயனர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
3 சதவீதம் கேஷ்பேக்
தற்போது ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட் வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய ரயில்வே அமைப்பு இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் இந்த 3 சதவீத தள்ளுபடி சலுகை ஆனது ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை ஆறு மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகை ரயில்ஒன் செயலியை பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது என்பதைக் கவனத்தில் கொள்க.
அதேசமயம் ஏற்கனேவ வழக்கத்தில் இருக்கும் R-wallet மூலம் 3 சதவீத கேஷ்பேக் வசதி இதனுடன் சேர்த்து தொடர்ந்து செயலில் இருக்கும் எனவும் இந்திய ரயில்வே அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளை காகிதமில்லா மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற்ற இந்த கேஷ்பேக் சலுகை திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.
புதிய விதிகள்
மேலும் சமீபத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியலை வெளியிடும் கால நேரத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. இது குறித்த விரிவான தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சில குறிப்பிட்ட ரயில்களுக்கான பயண டிக்கெட் நிலை விதிகளை இந்திய ரயில்வே மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விதிகள் மூலம் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகள், தங்கள் டிக்கெட் உறுதியாகவில்லை என்ற நிலையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய கூடுதல் அவகாசம் கொடுப்பதே நோக்கம் ஆகும்.
பொதுவாக ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்பதிவு பட்டியல் மற்றும் டிக்கெட் நிலை வெளியிடப்படும். ஆனால் புதிய விதிகளின்படி, காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு பட்டியல் முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு தயார் செய்யப்படும்.

மதியம் 2:01 மணி முதல் நள்ளிரவு 11:59 மணி வரை மற்றும் நள்ளிரவு முதல் அதிகாலை 5:00 மணி வரை புறப்படும் ரயில்கள்: இவற்றுக்கான முதல் முன்பதிவு பட்டியல், ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎன்ஆர் (PNR) எண்ணைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் டிக்கெட் மற்றும் முன்பதிவு நிலையைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஐஆர்சிடிசி (IRCTC)-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.irctc.co.in) அல்லது அங்கீகரிக்கப்பட்ட மொபைல் செயலிகள் மூலம் தங்களது 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை உள்ளிட்டு Check PNR Status என்பதை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








