YouTube வீடியோவுக்கு லைக் போட்ட பெண்ணுக்கு வந்த வினை.. பறிபோன ரூ. 24 லட்சம்!
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் கண் மருத்துவர் ஒருவர் யூடியூப் வீடியோவுக்கு (YouTube Video) லைக் போட்டதால் ரூ. 24 லட்சம் பணத்தை பறிகொடுத்தார் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?. நம்ப வைத்து ஏமாற்றுவது என்றால் என்ன என்பதை இந்த சம்பவம் ஒவ்வொருவருக்கும் உணர்ந்தும். இது குறித்த விவரம் இதோ.
இப்போதெல்லாம் விதவிதமாக பணம் பறிபோகிறது. வேர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை, தங்களது அறியாமையால் இழக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். ஒருத்தன ஏமாத்தனும்னா முதல்ல அவனை நம்ப வைக்கணும் என்று சொல்வார்கள். இதை சைபர் மோசடி கும்பல்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் பெண் கண் மருத்துவர் ஒருவருக்கு நடந்துள்ளது. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. அதில், எங்களிடம் பார்ட் டைம் ஜாப் (Part Time Job) வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தே பணியை செய்து முடிக்கலாம்.
நாங்கள் தேர்வு செய்து அனுப்பும் யூடியூப் வீடியோக்களுக்கு லைக் போட்டால் மட்டும் போதும், நாங்கள் மாதம் மாதம் உங்களது வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த பெண் மருத்துவரும் அந்த மோசடி கும்பலை தொடர்பு கொண்டு, அவர்கள் அனுப்பும் வீடியோக்களுக்கு தொடர்ந்து லைக் போட்டு வந்துள்ளார்.
இதற்காக அந்த மோசடி கும்பல் ரூ.500, ரூ.1000 என்று சிறு சிறு தவணையாக ரூ.10,275 பணத்தை சம்பளமாக கொடுத்து வந்துள்ளது. இந்த பணத்தை பெற்ற உடன் அந்த பெண் மருத்துவர் அந்த மோசடி கும்பலை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கி உள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் நாங்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகிறோம். அதன்மூலம் லட்சக்கணக்கில் லாபத்தை பெற்று வருகிறோம். உங்களுக்கு தேவைப்பட்டால் முதலீடு செய்ய உதவுகிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதை நம்பிய அந்த பெண் மருத்துவரும் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மார்ச் மாதம் ரூ. 23.83 லட்சம் பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தை பெற்றப் பின்பு பேச்சு வார்த்தையை அந்த கும்பல் குறைத்துக் கொண்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவர் நீண்ட நாள்களாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்படி ஒருநாள் தொடர்பு கொண்ட போது அந்த கும்பலிடம் இருந்து பதில் வந்துள்ளது.
ஆனால், கூடுதலாக ரூ.30 லட்சம் கட்டினால் மட்டுமே முதலில் கட்டிய பணத்தை பெற முடியும் என்று கூறி நூதனமாக மீண்டும் பணத்தை பெற திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்திலேயே அந்த மருத்துவருக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே, புனேவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் அந்த கும்பல் மீது புகார் அளித்துள்ளார். தான் பணம் அனுப்பிய வங்கி விவரங்களையும் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதேபோல மகாராஷ்டிராவில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்த அன்றாடம் செய்திகள் வெளியாகியும் யாரும் கவனமுடன் இருப்பதில்லை. குறிப்பாக, படித்தவர்களே இப்படிப்பட்ட சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்வது சற்று வியப்பாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








