ரூ.25 கோடிக்கு மாம்பழம் ஆர்டர்.. அதுவும் ஒரே மாதத்தில்.. அசுர வளர்ச்சியில் Zepto நிறுவனம்
மளிகை பொருட்களை 10 நிமிடங்களில் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் செப்டோ (Zepto) நிறுவனம் ஒரே மாதத்தில் ரூ.25 கோடிக்கு மாம்பழம் ஆர்டர் எடுத்துள்ளது. இரண்டு இளைஞர்களால் தொடங்கப்பட்ட செப்டோ நிறுவனம் இப்படி அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? இதுகுறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் (startup) நிறுவனமான செப்டோ வெறும், 9 மாதங்களில் 800 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அந்த நிறுவனத்தின் மதிப்பு சில லட்ச ரூபாயில் இருந்து ரூ.6,800 கோடியாக உயர்ந்தது. இந்த செப்டோ நிறுவனத்தை கைவல்யா வோஹ்ரா (Kaivalya Vohra) மற்றும் ஆதித் பலிச்சா (Aadit Palicha) ஆகியோர் தொடங்கினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு அங்கு மட்டுமே செயல்பட்டுவந்த செப்டோ நிறுவனம், இப்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. டன்சோ (Dunzo), ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart), ஜியோ மார்ட் (Jio Mart) ஆகிய நிறுவனங்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறது.
இந்த நிறுவனம் மளிகை பொருட்களை மட்டுமல்லாமல், பழங்களையும், காய்கறிகளையும் டெலிவரி செய்துவருகிறது. இப்போது மாம்பழ சீசன் என்பதால், அனைத்து வகையான மம்பழங்களையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவருகிறது. இதனால், கடந்த 3 மாதங்களில் மாம்பழ விற்பனை அமோகமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.60 லட்சத்துக்கு மாம்பழங்கள் விற்பனையாகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ. 25 கோடி மதிப்பிலான மாம்பழம் ஆர்டர்களை செப்டோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை செப்டோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், எந்த வகை மாம்பழங்கள் அதிகமாக விற்பனையானது, எந்த பகுதியில் விளைந்த மாம்பழங்களுக்கு வரவேற்புள்ளது உள்ளிட்ட தகவல்கள் அடங்கியிருக்கின்றன.
அதில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் விளைவிக்கப்படும் மாம்பழங்களும் இடம்பெற்றுள்ளன. மிகவும் விலையுயர்ந்த மாம்பழ வகையான அல்போன்சோ அதிக ஆர்டர்களை பெற்றுள்ளது. மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அதிக ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆர்டர்களில் ரத்னகிரியில் இருந்து கொண்டுவரப்பட்ட அல்போன்சோ மாம்பழங்கள் மொத்த விற்பனையில் 30 சதவீதத்தை கொண்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கனப்பள்ளி மாம்பழம் மொத்த விற்பனையில் 25 சதவீதத்தை பெற்றுள்ளது. அதேபோல கேசர் மாம்பழங்கள் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. இப்படி, அனந்தபூர், சித்தூர், கோலாப்பூர், பாலக்காடு, கிருஷ்ணகிரியில் விளையும் தோத்தாபுரி மாம்பழங்கள் அதிகளவில் விற்பனையாகி இருக்கின்றன. வெறும் மாம்பழத்தில் மட்டுமே இவ்வளவு ஆர்டர்களை பெற்ற செப்டோ நிறுவனம், ஒரு மாதத்திற்கு ரூ. 50 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செப்டோ நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் ஸ்ரீனிபாஸ் ஸ்வைன் கூறுகையில், "பழங்களும் காய்கறிகளும் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் சென்சேஷனாக மாறியிருக்கின்றன. மொத்த ஆர்டர்களில் 50 சதவீத ஆர்டர்களை அவை வகிக்கின்றன. இதன் மூலம் செப்டோ நிறுவனத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் எங்களுக்கு மாம்பழம் விற்பனை செய்யும் விவசாய பெருமக்கள் உடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறோம்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








