Google Maps-க்கு இப்படியொரு சிக்கலா.. மூவரை பலி வாங்கிய விபத்து.. கூகுள் அதிகாரி மீது வழக்குப்பதிவு..
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ் (Google Maps)-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பரேலி நோக்கி மூன்று இளைஞர்கள் காரில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. அப்போது ராம்கங்கா ஆற்றுக்குக் குறுக்கே சேதமடைந்த மேம்பாலத்தில் வழி இருப்பதாகக் கூகுள் மேப்பில் காட்டியதால் வேகத்தைக் குறைக்காமல் முன்னோக்கிச் சென்ற இளைஞர்கள் பாலத்தில் இருந்து விழுந்து பலியாகினர்.

இந்நிலையில் தான் பொதுப் பணித் துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரில் கூகுள் மேப்ஸின் மண்டல மேலாளரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அந்த பாலத்தில் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பகுதிகளில் உள்ள சாலைகள் பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆய்வு செய்யவும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேசிய கூகுள் (Google) நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது என்னவென்றால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பின்பு இந்த விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
குறிப்பாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நிதின் குமார்(30) மற்றும் அவரது சகோதரர்களான அமித் குமார் மற்றும் அஜீத் குமார் ஆவார். பின்பு நிதின் மற்றும் அமித் ஆகிய இருவரும் ஃபரூகாபாத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களின் தூரத்து உறவினர் தான் அஜீத். மேலும் நிதினும் அஜித்தும் குரு கிராமில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் மூன்றும் பேரும் தங்களது குடும்பத் திருமணத்தில் பங்கேற்க ஃபரித்பூர் சென்றுகொண்டிருந்தனர். அதுவும் மொபைலில் மேப் மூலம் வழி தேடி வந்துகொண்டிருந்த இவர்கள் கார், ராம்கங்கா பாலம் அருகே வந்தபோது கிழே விழுந்துள்ளது என்கிறார் நிதினின் மாமா ராஜேஷ் குமார்.

அதுவும் ராம்கங்கா பலத்தின் அருகே வரும்போது எந்த வித எச்சரிக்கை அறிவிப்பையும் மேப் வழங்கவில்லை என அவர்கள் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல் இந்த விபத்திற்குப் பிறகு அங்கு கூடி இருந்த மக்களும் மேப்பில் பாலத்தருகே எந்தவித தடையையும் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேசமயம் அந்த பாலத்தின் அருகே எந்த ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையும் இல்லை என்றும் அந்த நேரத்தில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அதிநவீன தொழில்நுட்பம் இருந்தாலும் அதை கவனமாகத் தான் பயன்படுத்த வேண்டும். முன்பின் தெரியாத இடத்துக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸ் மற்றும் வழியில் வரும் உள்ளூர் மக்களிடம் சரியான பாதைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின்பு பயணம் செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications