வராங்க., டீக்குடிக்கிறாங்க., ஸ்கேன் செய்து காசு போட்றாங்க ஆனா காசு காணோம்- QR Code மோசடி!
டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாட்டின் பிரதான ஒன்று டிஜிட்டல் பேமெண்ட். டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்வதற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது சிறிய தொழில் முதல் பெரிய தொழில்வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர் பரிவர்த்தனை
குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் டிஜிட்டல் செயல்முறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைன் ஆர்டரில் கிடைக்கிறது. மேலும் சமூகஇடைவெளியை கடை பிடிக்கும் வகையில் நேரில் வாங்கும் பொருட்களுக்கும் கடையில் க்யூஆர் கோட் சோதனை முறையிலும், ஏடிஎம் கார்ட், கூகுள் பே, போன் பே மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.

க்யூஆர் கோட் ஸ்கேன்
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் கந்தன்சாவடியில் டீக்கடை நடத்தி வருபவர் துரை. இவரது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்த க்யூஆர் கோட் அட்டை வைத்துள்ளார். வாடிக்கையாளர்களும் க்யூஆர் கோட் முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிப்பு வருமானம் குறைவு
க்யூஆர் கோட் மூலம் செலுத்தப்படும் வங்கி கணக்கில் வருமானம் குறித்து பார்த்துள்ளார். வாடிக்கையாளர்கள் வருகை இருந்தாலும் மாத வருமானத்தில் வருவாய் குறைந்தே இருந்துள்ளது. இதையடுத்து துரை வங்கி கணக்கு வரவு செலவு குறித்து சோதனை செய்துள்ளார். அப்போது கடையில் இருந்க க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் அது வேறு வங்கி கணக்குக்கு சென்றுள்ளது.

க்யூஆர் கோடுக்கு மேல் க்யூஆர் கோட் ஸ்டிக்கர்
இதனால் ஆச்சரியமடைந்த துரை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். போலீஸார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு சந்தேகம்படும்படியாக இருவர் இருந்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கடை உரிமையாளர் ஒட்டிய க்யூஆர் கோட் ஸ்கேன் அட்டைக்கு மேல் இவர்கள் வேறு க்யூஆர் கோட் ஸ்கேன் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்.

வேறு கணக்குக்கு வரவு
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் கடை உரிமையாளர்கள் கணக்கிற்கு பதிலாக மோசடி செய்தவர்கள் வங்கி கணக்குக்கு சென்றுள்ளது. மோசடி செய்த இருவர்களில் ஒருவர் தனியார் டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் பணிபுரிகிறார். இவர்கள் வேறு இடத்தில் இதுபோன்ற செயல்களை செய்துள்ளார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

க்யூஆர் கோட் ஸ்கேன்
இனி நீங்கள் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அதில் காட்டப்படும் பெயரை கடைக்காரர்களிடம் உறுதிப்படுத்திவிட்டு பணம் செலுத்தவும். அதேபோல் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் அனுப்பிய பணம் கணக்கில் வந்து விட்டதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

நட்பாக பேசிப்பழகி பண மோசடி
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

பரிசுத் தொகை கிடைக்கும் என மோசடி
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
File Images


Click it and Unblock the Notifications