PM Modi பாதுகாப்பு செலவு: நிமிடத்திற்கு ரூ.11,000, ஹவருக்கு: ரூ.6.75 லட்சம்.,அப்போ ஒரு நாளுக்கு?
பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே தற்போது சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு செலவுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது? என இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், சிஆா்பிஎஃப் படையினரின் பாதுகாப்பில் 56 முக்கிய பிரமுகா்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்கள் யார்
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பதிலளிக்க இயலாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

அச்சுறுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பு
அதேபோல் முக்கிய பிரமுகா்களுக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவா்களுக்கான பாதுகாப்பு மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.பி.ஜி-க்கு ரூ. 592.55 கோடி
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட எஸ்.பி.ஜி-க்கு (சிறப்பு பாதுகாப்புப் படை) ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார்.

10 சதவீதம் அதிகம்
இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 540.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது இதில் தற்போது ரூ.595.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
ஆனால் கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான செலவில் பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என நான்கு பேருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரிவில் இருந்தனர்.

எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக்கப்படுவதாக அறிவிப்பு
சமீபத்தில் சோனியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு அவர்களுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது, பிரதமர் மோடி மட்டுமே எஸ்.பி.ஜி பிரிவில் உள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி
சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி என்பதன் அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது என தெரியவந்துள்ளது.

சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப்
1985 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. அதற்கான சட்டம் கடந்த 1988 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்பைடியில் சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப் படைகளிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களை சிறப்பு பாதுகாப்பு படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








