ISRO தலையெழுத்தை மாற்ற போகும் NASA.. ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோடி! இது ஏன் முக்கியம்?
இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு பணிகளையும், அதன் வழியிலான உலகளாவிய சாதனைகளையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் ஒப்பந்தம் ஒன்றில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கையெழுத்திட்டு உள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா உடனான ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் (Artemis Accords) கையெழுத்திட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும், அதன் விண்வெளி ஆராய்ச்சிக்கும் எவ்வளவு முக்கியம்? இதோ விவரங்கள்:

ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன? 1967 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தத்தின் (United Nations Outer Space Treaty) அடிப்படையிலான, ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் என்பது அமெரிக்க அரசாங்கத்திற்கும், பிற உலக அரசாங்கங்களுக்கும் இடையிலான பிணைப்பு இல்லாத பலதரப்பு ஏற்பாடாகும்.
இது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் (Artemis program) ஒரு பகுதியாகும், நினைவூட்டும் வண்ணம் ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை சந்திர (Monn) கிரகத்திற்கு "மறுபடியும்" மனிதர்களை அனுப்பி, அதன் வழியாக செவ்வாய் (Masr) மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களை ஆய்வு செய்வதற்கான அமெரிக்காவின் கனவு திட்டமாகும்.
ஜூன் 22, 2023 நிலவரப்படி - இந்த ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் - மொத்தம் 26 நாடுகளும் ஒரு பிரதேசமும் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பாவில் இருந்து 10 நாடுகள், ஆசியாவில் இருந்து 8 நாடுகள் வட அமெரிக்காவில் இருந்து 3 நடுகல், ஓசியானியாவில்இருந்து 2 நாடுகள், ஆப்பிரிக்காவில் இருந்து 2 நாடுகள் மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து 2 நாடுகள்.
ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லா நாடுகளுமே அமைதியான முறையில் விண்வெளி ஆய்வு, விண்வெளி ஆய்வில் வெளிப்படையாக இருப்பது, விண்வெளி வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது மற்றும் சந்திரனில் உள்ள வரலாற்று தளங்கள் மற்றும் கலைப்பொருட்களை பாதுகாப்பது போன்ற கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இஸ்ரோவிற்கு என்ன பயன்? ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டதின் மூலம், உலகளாவிய விண்வெளி ஒத்துழைப்புக்கான (Global space cooperation) அதன் அர்ப்பணிப்பையும், சந்திர கிரகம் தொடர்பான ஆய்வு பணிகளில் பங்கேற்பதில் அதன் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இணைவதன் மூலம், இந்தியாவானது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து, சந்திர கிரகத்திற்கான எதிர்கால விண்வெளி பயணங்கள் தொடர்பான அறிவையும், நிபுணத்துவத்தையும் (Knowledge and Expertise) பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் அறிவியல் ஆராய்ச்சி (Scientific research), தொழில்நுட்ப வளர்ச்சி (Technological development) மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் இருப்பை விரிவுபடுத்துதல் (Expanding Humanity's presence in Space) போன்ற பரந்த மற்றும் எதிர்கால இலக்குகளிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் பங்கேற்க முடியும்.
எல்லாவற்றை விட முக்கியமாக, ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தின் கையெழுத்திட்டது தவிர்த்து, மோடியின் அமெரிக்க பயணத்தின் விளைவாக, நாசாவும், இஸ்ரோவும் கூட்டு சேர்ந்து வருகிற 2024 ஆம் ஆண்டில் ஐஎஸ்எஸ்-க்கான (அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான) கூட்டு பணி ஒன்றிற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








