1 கப் டீயும் 1ஜிபி டேட்டாவும்.. புள்ளி விவரங்களை அள்ளி வீசிய மோடி.. IMC 2025 நிகழ்வின் ஹைலைட்ஸ்!
இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 (India Mobile Congress 2025) நிகழ்வின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி (PM Modi), மொபைல் நெட்வொர்க்குகளை இயக்குவதற்கான முழுமையான டூல்கள் மற்றும் டெக்னாலஜியை உருவாக்கிய உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, முழுக்க முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட "4ஜி ஸ்டேக்" (4G Stack) ஆனது ஏற்றுமதிக்கு தயாராக உள்ளது என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியுள்ளார். நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் - 4ஜி சேவைகளை இயக்குவதற்கான கருவிகள் மற்றும் மென்பொருளின் தொகுப்பை உள்ளடக்கிய, உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு ஸ்டேக்கை (பிஎஸ்என்எல் 4ஜியை) மோடி அறிமுகப்படுத்தி இருந்தார்.

இதன் மூலம் - டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனாவுக்கு பிறகு நான்காவது தலைமுறை (4ஜி) மொபைல் தொழில்நுட்ப ஸ்டேக்கை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்தது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4ஜி ஸ்டேக் ஆனது ஏற்றுமதிக்கு தயாராக உள்ளது.
இது டிஜிட்டல் தன்னம்பிக்கை, தொழில்நுட்ப சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் ஒரு பெரிய படியாகும். உள்நாட்டு 4ஜி மற்றும் 5ஜி இணைப்பு மூலம், தடையற்ற இணைப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கு வேகமான இணையம் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்கவும் முடியும் என்றும் மோடி கூறினார்.
இதற்காக இந்திய அரசாங்கம் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு வருவதாகவும், உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் பிரதமர் கூறினார். 5ஜி, 6ஜி, மேம்பட்ட ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டெரா-ஹெர்ட்ஸ் போன்ற தொழில்நுட்பங்களுக்கான சோதனைகளுக்கு அரசாங்கம் நிதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
எல்லாவற்றை விட முக்கியமான இன்று இந்தியாவில், ஒரு ஜிபி வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவாக உள்ளது. தேநீரை உதாரணமாக கொடுக்கும் பழக்கம் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். கடைசியாக - இந்தியா இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக உருவெடுத்துள்ளது என்றும், ஒரு பயனருக்கான டேட்டா நுகர்வு அடிப்படையில் முன்னணி நாடாக உள்ளது என்றும் மோடி சில புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார்!
இந்த நிகழ்வில் பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆன ஜோதிராதித்ய சிந்தியா, 6ஜி தொழில்நுட்பத்தில் உலகளாவிய காப்புரிமைகளில் 10% பெற இந்தியா இலக்கு வைத்துள்ளதாக கூறினார். 6ஜி தொலைத்தொடர்பு சேவை 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 டிரில்லியன் டாலர்களை பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா இனி வெறும் தொழில்நுட்ப நுகர்வோர் அல்ல. தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தின் கட்டமைப்பாளர்களாக இருக்க நாங்கள் பாடுபடுகிறோம். இந்தியாவின் உள்நாட்டு 4ஜி ஸ்டேக் மற்றும் 5ஜி ஸ்டேக் முதல் 6ஜி க்கான ரான் (RAN) முன்மாதிரிகளை திறப்பது வரை, சிப் வடிவமைப்பு, பாதுகாப்பான கோர், செயற்கைக்கோள் பேக்ஹால் மற்றும் ஏஐ நேட்டிவ் நெட்வொர்க்குகள் முழுவதும் இறையாண்மை திறன்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த அக்.8 ஆம் தேதி தொடங்கி, வருகிற அக்.11 ஆம் தேதி வரை நடக்கும் - ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வு என்று அழைக்கப்படும் 9வது இந்திய மொபைல் காங்கிரஸில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 7000 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








