40 செமீ கேப்புல தப்பிச்சேன்.. தலைக்கு அருகே வெடித்த ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்? எப்படி நடந்தது?
ரெடிட் (Reddit) பயனர் ஒருவர், 40 சென்டி மீட்டருக்கும் குறைவான இடைவெளியில், தனது தலைக்கு அருகே வெடித்து சிதறிய தனது ஸ்மார்ட்போன் குறித்து பதிவுட்டுள்ளார். அதென்ன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்? என்ன மாடல்? எப்படி வெடித்தது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
கிஸ்மோசீனா (Gizmochina) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ரெடிட் பயனர் ஒருவர் தனது படுக்கைக்கு அருகே உள்ள மேசையில் சார்ஜ் செய்யும் போது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஆனது தீப்பிடித்தது தொடர்பான திகிலூட்டும் (Google Pixel 6a Catches Fire) சம்பவத்தை பற்றி புகார் அளித்து உள்ளார்.

அந்த ரெடிட் பயனரின் கூற்றுப்படி, தனது தலையில் இருந்து 40 சென்டிமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தபோது தான் அவருடைய ஸ்மார்ட்போன் திடீரென ஒரு பெரிய சத்தத்துடன் வெடித்து, கடுமையான எரியும் வாசனையை வெளியிட்டுள்ளது. விரைவாக பரவி தீ ஆனது அருகிலுள்ள படுக்கை விரிப்பையும் பற்றவைத்துள்ளது.
மூடிய அறையில் இருந்ததால் தீயால் ஏற்பட்ட புகையை அந்த ரெடிட் பயனர் உள்ளிழுத்துள்ளார். இதன் விளைவாக அவர் தொண்டையில் அசௌகரியம் மற்றும் நாள் முழுவதுமாக நீடித்த சில அறிகுறிகளை சந்தித்துள்ளார். அந்த ரெடிட் பயனரின் பதிவின்படி, இந்த சம்பவம் ஜூலை 26 அன்று நடந்துள்ளது. தீ மேலும் பரவாமல் தடுக்க, அவர் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் கேபிளை பிடிங்கி தரையில் எறிந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் எறிந்த பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் மற்றும் அவரது அறையில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது தான் சந்தித்த மிகவும் "பயங்கரமான" அனுபவம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மின்னஞ்சல் மூலம் கூகுள் ஆதரவை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நினைவூட்டும் வண்ணம், முன்னதாக கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 6ஸ் மாடலுக்கான கட்டாய சாஃப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டு இருந்தது. இது 400 சார்ஜிங் சுழற்சிகளை தாண்டிய யூனிட்களில் பேட்டரி செயல்திறனை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட அப்டேட் ஆகும். இந்த அப்டேட் நிறுவப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட டிவைஸ்கள் அதிகம் வெப்பமடையலாம் அல்லது தீ பிடிக்கும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்தது.
இந்த அப்டேட் 2025 ஜூலை 8 அன்று வெளியிடப்பட்டது மற்றும் 375 சுழற்சிகளைத் தாண்டிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பயனர்கள் இதுகுறித்த எச்சரிக்கையை பெற்றன; கூடவே இலவச பேட்டரி மாற்றத்திற்கும் தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
சில பயனர்கள், கூகுள் அனுப்பிய பிக்சல் 6ஏ அப்டேட் ஆனது விஷயங்களை இன்னும் மோசமாக்கியதாக புகார் அளித்திருந்தனர். சமூக ஊடகங்களில் ஒரு பயனர், அப்டேட் செய்வதற்கு முன்பு தனது ஸ்மார்ட்போன் ஒருபோதும் வெப்பமாக்கல் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை ஆனால் அப்டேட் செய்த பின்னர் மிகவும் சூடாக இயங்கத் தொடங்கியது என்றும் கூறினார். அவர் பேட்டரியை மாற்றிய பின்னரே இந்த சிக்கல் சரியானதாகவும் அவர் கூறினார்.
ரெடிட் பயனரின் இந்த சமீபத்திய தீ விபத்து அறிக்கை ஆனது, சமீபத்திய மாதங்களில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட மூன்றாவது விபத்து ஆகும். கடந்த மே மாதத்தில், இதேபோல மற்றொரு பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் பேட்டரி வீங்கியதன் விளைவாக வெடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சில பயனர்கள் தங்களுக்கு எந்த முன் எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும், அவர்கள் கூகுளின் வாக்-இன் பழுதுபார்க்கும் மையங்களால் ஆதரிக்கப்படும் பகுதிகளில் இல்லை என்றும் கூறுகின்றனர்.
சமீபத்திய தீ விபத்திற்கு பதிலளிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இதுவரை எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் பழைய பிக்சல் 6ஏ யூனிட்களின் பாதுகாப்பு மற்றும் தீ பிடிக்கும் அபாயங்களை குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சாஃப்ட்வேர் அப்டேட்டின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்புகிறது!


Click it and Unblock the Notifications








