இனி இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் அனுப்பலாம்.. போன்பே அறிமுகப்படுத்திய புதிய வசதி..
இந்தியா முழுவதும் தற்போது யுபிஐ (UPI) சேவையை மக்கள் அதிக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி விரைவாக பணம் அனுப்ப முடிகிறது. அதேபோல் இந்த யுபிஐ செயலிகளில் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படுகிறது. எனவே தான் யுபிஐ செயலிகளை இந்தியா முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்து கொள்ளும் புதிய வசதியை போன்பே (PhonePe) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஃபீச்சர் போன் (feature phone) எனப்படும் சாதாரண பட்டன் போன் பயன்படுத்தும் நபர்களுக்குப் பணம் அனுப்ப ஏதுவாக போன்பே யுபிஐ 123பே (PhonePe UPI 123Pay) என்ற சேவையை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் சாதாரண மாடல் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த பயனர்களுக்கு யுபிஐ கட்டணச் சேவைகளை வழங்கும் வகையில் இந்த புதிய சேவையை போன்பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யுபிஐ கட்டண சேவைகளை சாதாரண மொபைல் மாடல்களுக்கு வழங்கிய முதல் பெரிய மூன்றாம் தரப்பு செயலி வழங்குநர் என்ற பெருமையை போன்பே பெற்றுள்ளது.
அதுவும் போன்பே நிறுவனம் உருவாக்கிய சிறப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த சேவை செயல்படுகிறது. குறிப்பாக 2ஜி இணைய வசதி குறைவாக இருக்கும் பகுதிகளிலும் பரிவர்த்தனை தடையின்றி நடைபெற எஸ்எம்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நோக்கியா, எச்எம்டி, லாவா, ஐடெல் போன்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து புதிய போன்களிலேயே இந்த சேவையை உள்ளடக்கி வழங்க போன்பே நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்த யுபிஐ சேவை அந்த நிறுவனங்களின் சில போன்களில் முன்கூட்டியே நிறுவப்பட்டிருக்கும்.
அதேபோல் இந்த சேவை தொடங்கப்பட்டது குறித்து போன்பே நிறுவன தலைமை செயல் அதிகாரி சமீர் நிகம் கூறியது என்னவென்றால், ஸ்மார்ட்போன் இல்லாத மக்களுக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை கொண்டு செல்வதற்கான முக்கிய முயற்சிதான் போன்பே யுபிஐ 123பே (PhonePe UPI 123Pay). இதன் மூலம் 30 கோடி மக்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் இணைப்பதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.

மேலும் போன்பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சேவையின் மூலம் பயனர்கள் மற்றவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பலாம். அதேபோல் கடைகள் மற்றும் வணிகர்களுக்குப் பணம் செலுத்தலாம். கேமரா வசதி உள்ள போன்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம், வங்கி கணக்கு விவரங்களை நிர்வகிக்கலாம், பேலன்ஸ் சரிபார்க்கலாம் மற்றும் பரிவர்த்தனை ஹிஸ்டரியை பார்க்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர புதிய பயனர்களுக்கு உதவ ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் ஏஐ (AI) குரல் உதவி மையத்தையும் போன்பே அறிமுகம் செய்துள்ளது. எதிர்காலத்தில் மின் கட்டணங்கள் மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஆதார் அடிப்படையிலான பதிவு போன்ற கூடுதல் வசதிகளும் இந்த சேவையில் சேர்க்கப்பட உள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக போன்பே கொண்டுவந்துள்ளது இந்த புதிய வசதி நாட்டில் பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications