UPI மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி.. எப்போது அறிமுகம்.. வெளியானது முக்கிய தகவல்..
இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் யுபிஐ (UPI) குறித்தும் ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது இப்போது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதில் உள்ள ஆவணங்கள் மற்றும் காரணங்கள் போன்ற அனைத்தையும் சரிபார்த்து உங்களுக்குப் பணம் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுப்பார்கள்.

ஆனால் இனிமேல் அந்த கவலை இருக்காது. அதாவது விரைவில் பிஎப் பணத்தை யுபிஐ வழியாக எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி கொண்டுவரப்பட உள்ளதாக இபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் பிஎப் சந்தாதாரர்கள் தங்களது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ பேமென்ட் கேட்வே வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிஎப் கணக்கில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை மட்டுமே நம்முடைய வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக யுபிஐ மூலம் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஓரு ஊழியரின் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது அதில் எவ்வளவு பணம் எடுக்க முடியும் போன்ற அனைத்து விவரங்கள் தெரிவிக்கப்படும்.
அதேபோல் இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டால் கிட்டத்தட்ட 8 கோடி பேர் இதன் மூலம் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பிஎப் பணத்திற்கு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலைமை இனி இருக்காது. அதாவது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை விரைவாக வங்கிக்கணக்கின் யுபிஐ-க்கு மாற்றம் செய்து அதை உடனே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட பிஎப் புதிய விதிகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
புதிய விதிமுறை
புதிய விதிமுறையின்படி, எல்லா வகையான தேவைகளுக்கும் வெறும் 12 மாதங்கள் அதாவது ஒரு ஆண்டு வேலை பார்த்திருந்தாலே போதும் பிஎப் பணம் எடுக்க முடியும். குறிப்பாக ஊழியரின் பங்களிப்பு மட்டுமின்றி நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் வட்டி என மொத்த தொகையில் 75 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்.
ஒருவர் 12 மாதங்கள் வேலையை முடித்த பிறகு கீழே உள்ள 5 முக்கிய காரணங்களுக்காகத் தகுதியான தொகையில் 100 சதவீதம் வரை எடுக்க அனுமதி உண்டு.
மருத்துவம்: ஊழியர்கள் அல்லது ஊழியர்களின் குடும்பத்தினருக்கோ சிகிச்சை பெற ஆண்டுக்கு 3 முறை வரை எடுக்கலாம்.
கல்வி: சொந்த மேற்படிப்பு அல்லது குழந்தைகளின் படிப்பிற்கு மொத்த பணிக்காலத்தில் 10 முறை எடுக்கலாம்.
திருமணம்: ஊழியர்கள் அல்லது ஊழியர்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்ய 5 முறை வரை எடுக்கலாம்.
வீடு: வீடு வாங்குதல், கட்டுதல் அல்லது லோன் அடைக்க 5 முறை அனுமதி கொடுக்கப்படும்.
காரணம் வேண்டாம்: எந்த காரணமும் சொல்லாமல் அவசரத் தேவைக்கு ஆண்டுக்கு 2 முறை பணம் எடுக்கலாம்.
ஊழியர்கள் முழுப்பணத்தையும் எடுத்துவிட்டால், ஓய்வுக்காலத்தில் கையில் பணம் இருக்காது என்பதால் பாதுகாப்பிற்காக 25 சதவீதம் தொகையை EPFO அமைப்பு கணக்கிலேயே வைத்திருக்கும். குறிப்பாக பிஎப் கணக்கிற்கு வழங்கப்படும் 8.25 சதவீதம் வட்டி மூலம் உங்கள் பணம் வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

குறிப்பாக வேலை இழந்தவுடன் மொத்த இருப்பில் 75 சதவீதம் உடனே எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 25 சதவீதம் தொகையை ஒருவருடம் கழித்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 55 வயதிற்குப் பின்பு ஓய்வு பெறுபவர்கள் உடல் ஊனம் அல்லது நிரந்தரமாக வெளிநாடு செல்பவர்கள் 100 சதவீதம் பணத்தையும் முழுமையாக எடுக்க எந்த தடையுமில்லை.
மேலும் பிஎப் புதிய விதிகள் உங்கள் பென்ஷன் (EPS) திட்டத்தைப் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 10 ஆண்டுகள் பணி முடித்தால்தான் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். அவசரப்பட்டு பென்ஷன் பணத்தை முன்கூட்டியே எடுத்தால், பிற்காலத்தில் கிடைக்க வேண்டி பலன்கள் இழக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








