PF பணம் புது ரூல்ஸ்.. EPFO முக்கிய அறிவிப்பு.. தானாகவே பேங்க் அக்கவுண்ட்க்கு வரும்.. யாருக்கு, எவ்வளவு?
தொழிலாளர் அமைச்சகம் ஆனது, லட்சக்கணக்கான பிஎப்தாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், இபிஎப்ஓ (EPFO) என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் செயல்படாத கணக்குகளில் உள்ள சிறிய அளவிலான நிலுவைகளை திருப்பி தர முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான பிஎப் அக்கவுண்ட் பேலன்ஸ் இருப்புகளை கொண்ட, செயல்படாத இபிஎப் கணக்குகளை மட்டுமே உள்ளடக்கியது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பணத்தை திரும்ப பெறும் செயல்முறை ஆனது எந்த ஆவணங்களும் இல்லாமல் தானாகவே செயல்படுத்தப்படும்.

அதாவது கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவோ அல்லது இபிஎப்ஓ அலுவலகங்களுக்கோ செல்லவோ தேவையில்லை. இந்த தொகை பிஎப் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதுகுறித்த அறிவிப்பில் - ஓய்வூதிய நிதி அமைப்பின் இபிஎப்ஓ-வின் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட செயல்படாத கணக்குகளில் சிக்கியுள்ள மொத்தம் ரூ.30.52 கோடி விரைவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு திருப்பி தரப்படும் என்று தொழிலாளர் அமைச்சக வட்டாரம் கூறியுள்ளது.
மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது, ஒரு மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ஒவ்வொன்றும் ரூ.1,000 வரை இருப்பு வைத்திருக்கும் 7.11 லட்சம் இபிஎப்ஓ கணக்குகளுக்கு தீர்வு காண முடிவு செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.
செயல்படாத இபிஎப் கணக்கு என்றால் என்ன? 36 மாதங்களுக்கும் மேலாக ஊழியரிடமிருந்தோ அல்லது முதலாளியிடமிருந்தோ எந்த பங்களிப்பையும் பெறாத வருங்கால வைப்பு நிதி கணக்குகள் ஆனது செயல்படாத கணக்குகளாக குறிப்பிடப்படுகிறது.
தற்போது இபிஎப்ஓ-வின் கீழ் உள்ள 31.86 லட்சம் செயல்படாத கணக்குகளில் மொத்தம் ரூ.10,903 கோடி நிலுவையில் உள்ளதாக பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவற்றில், கிட்டத்தட்ட ஏழு லட்சம் கணக்குகளில் மட்டுமே ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான இருப்பு உள்ளது. இது ஓய்வுக்கு பிந்தைய நிதியில் ரூ.30.52 கோடி ஆகும்.
ஆதார் உடன் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கான நேரடி பரிமாற்றங்கள்: திரட்டப்பட்ட தொகைகள் ஆதாருடன் இணைக்கப்பட்ட கணக்குகளை கொண்ட இபிஎப் உறுப்பினர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படும். ஒருவேளை கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், நிதிகள் பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு அந்த பணம் கொடுக்கப்படும். இதனால் சரியான பயனாளிகள் நிலுவை தொகையைப் பெறுவது உறுதி செய்யப்படும்.
இபிஎப்ஓ 3.0-ன் கீழ் உறுப்பினர் சேவைகளை டிஜிட்டலுக்கு மேம்படுத்துதல்: ரூ.1000 அல்லது அதற்கும் குறைவான பேலன்ஸ் கொண்ட அக்கவுண்டர்களின் இந்த "சுத்திகரிப்பு" முயற்சியுடன் சேர்த்து, ஒரு பெரிய டிஜிட்டல் உருமாற்ற திட்டமான இபிஎப்ஓ 3.0 இலும் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியானது, உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகளை மிகவும் திறமையாக அணுக அனுமதிக்கும் வகையில், கோர் பேங்கிங் சிஸ்டம் (CBS)-இயக்கப்பட்ட வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இபிஎப்ஓ சேவைகளை நவீனமயமாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதன்கீழ் செயல்முறைகள் நெறிப்படுத்தப்படும், காகித வேலைகள் (Paper Work) குறைக்கப்படும், விரைவான உரிமைகோரல் தீர்வுகள் செயல்படுத்தப்படும், அனைத்து உறுப்பினர் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தளம் வழங்கப்படும் மற்றும் விரைவான உரிமைகோரல்கள் நடைமுறைக்கு வரும். இதற்கான தீர்வு நேரம் 3 நாட்களுக்குள் நடக்கும்.
இந்த புதிய அமைப்பின் கீழ், தெளிவான இடர் மேலாண்மை சோதனைகள் ஆனது கைமுறையான தலையீடுகள் இல்லாமலேயே தானாகவே செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆட்டோமேஷன் உரிமைகோரல் தீர்வு நேரத்தை 20 நாட்களில் இருந்து 3 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








