இது தேறாது.. Paytm-ஆல் முடியல.. ஜூன் 26-க்கு அப்புறம்.. முடிஞ்சத பாத்தாச்சு.. கிளம்பிய நிர்வாக இயக்குநர்!
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் விதிகளை மீறியதற்காக பேடிஎம் நிறுவனம் படும்பாட்டை சொல்லி தெரிய வைக்க வேண்டியதில்லை. ஏற்கனவே, பேடிஎம் வாலெட், ஃபாஸ்டேக் போன்ற பல்வேறு சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், பேடிஎம் (Paytm) நிறுவனம் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பதவியை வகித்துவந்த சுரீந்தர் சாவ்லா எடுத்துள்ள முடிவானது, அந்த நிறுவனத்தின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உடைத்து விட்டது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) விதித்த காலக்கெடுவானது, மார்ச் 15ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.

ஆகவே, ஆர்பிஐ விதிமுறைகளின்படி பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் வாலெட், பாஸ்டேக் உள்ளிட்ட எதிலும் டாப்-அப் செய்ய முடியாது. அதேபோல மற்ற வங்கிகள் மூலம் சம்பளம் வரவு உள்ளிட்ட எந்தவொரு தொகையையும் பேடிஎம் பேமெண்ட் வங்கியில் பெற முடியாது. இருக்கும், பேலன்ஸ் தொகையை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதனால், பேடிஎம் யூசர்கள் வேறு வங்கி கணக்கை இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனிடயே ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றிடம் ஒப்பந்தம் செய்து நோடல் அக்கவுண்ட்டை கொண்டு வருவதற்கான முயற்சியில் பேடிஎம் நிறுவனம் ஈடுபட்டது. இதனால், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சிறிதளவு நம்பிக்கையில் இருந்தனர்.
அதே நேரத்தில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் பகுதி நேர நிர்வாகமற்ற தலைவராக இருந்த விஜய் சேகர் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பேடிஎம் பங்குகள் சரிந்ததால், பேடிஎம் பேமெண்ட் வங்கியின் நிர்வாக குழுவானது மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் மற்ற வங்கிகளின் மூன்றாம் தர யுபிஐ ஆப் (Third Party UPI App) சேவைகளை வழங்க பேடிஎம் நிறுவனத்துக்கு என்பிசிஐ (NPCI) அனுமதி வழங்கியது. இருப்பினும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை தவிர்த்துவிட்டது. இதனால், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி இது தேறாது என்ற மனநிலைக்கே சென்றுவிட்டனர்.
இதை உறுதி செய்யும் விதமாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ பதவி வகித்து வந்த சுரீந்தர் சாவ்லா ( Surinder Chawla) திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏப்ரல் 8ஆம் தேதியே கொடுத்துள்ளார். இதுகுறித்து பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் ராஜினாமா குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறது.
அதில், சுரீந்தர் சாவ்லா அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சிறந்த தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக பதவி விலகுகிறார். ஜூன் 26ஆம் தேதியில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த ராஜினாமா தொடர்வதால், ஜூன் 26ஆம் தேதிக்கு பிறகு புதிய சிஇஓ தேர்ந்தெடுக்கப்படுவரா என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே எழுகிறது.
ஏனென்றால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாடுகளுக்கு பிறகு பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களில் மட்டும் 50 சதவீத பங்குகளை அந்த நிறுவனம் இழந்துவிட்டது. இதனிடையே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் தங்களுக்கும் இருக்கும் ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டதாக ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்திருந்தது. ஆகவே, அந்த நிறுவனம் இப்போது தனித்துவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








