குட்-பை பேடிஎம்.. அப்ரூவல் வந்தாச்சு.. வேறு நிறுவனமாக மாறுகிறது.. 3 மாதங்களுக்கு முன்பே எடுத்த முடிவு!
ஆர்பிஐயின் (RBI) கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் பேடிஎம் ஈகாமர்ஸ் (Paytm E-commerce) நிறுவனமானது, பை பிளாட்ஃபார்ம்ஸ் (Pai Platforms) நிறுவனமாக மாறுகிறது. இந்த முடிவு 3 மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மத்திய அரசின் அப்ரூவல் கிடைத்துவிட்டது. விவரம் இதோ.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதாக ஜனவரி 31ஆம் தேதி பேடிஎம் (Paytm) நிறுவனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் சேவைகளுக்கு தடை விதித்தும் ஆர்பிஐ உத்தரவிட்டது.

இந்த தடையை விலக்குவதற்காக பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான விஜய் சேகர் சர்மா, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து பேசி இருக்கிறார். இருப்பினும், மத்திய அரசு செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
இதனால், பேடிஎம் யூசர்கள் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்ற கவலையில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பேடிஎம் நிறுவனம், பேடிஎம் ஈகாமர்ஸ் பிரைவேட் லிமிடெட் (Paytm E-Commerce Private Limited) என்னும் பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் (Pai Platforms Private Limited) என்று மாற்றுவதற்கான ஒப்புதல் பெற்றுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூன்று மாதங்களுக்கு முன்பே பெயரை மாற்றுவதற்காக மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆர்ஓசி (RoC) என்னும் நிறுவனங்களின் பதிவாளரிடம் (Registrar of Companies) பேடிஎம் நிறுவனம், விண்ணப்பித்து இருக்கிறது. இந்த விண்ணப்பத்துக்கு பிப்ரவரி 8ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ரிசர்வ் வங்கியிடமிருந்து கிரீன் சிக்னல் வரவில்லையென்றால், பேடிஎம் நிறுவனம் புதிய பெயரில் மாறிவிடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல அதன் சேவைகளுக்கும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு தடை விதிக்கப்படும் என்பதும் தெரிய வருகிறது. இப்போது, பேடிஎம் நிறுவனத்துக்கு இருக்கும் வாய்ப்பு புதிய நிறுவனத்தை தொடங்குவது மட்டும்தான்.
இதை செய்தால், மட்டுமே அந்த நிறுவனத்தின் பங்குகளையும், வாடிக்கையாளர்களையும் தக்க வைத்து கொள்ள முடியும். இதற்கான வேலையையும் பேடிஎம் பார்த்துவிட்டது என்றே சொல்லலாம். உண்மைதான், பிட்சிலா (Bitsila) என்னும் இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இந்த பிட்சிலாவானது, ஓஎன்டிசியின் (ONDC) விற்பனையாளர் தளத்தில் முன்னணியில் இருக்கிறது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்னோபிட்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Innobits Solutions Private Limited) என்னும் நிறுவனத்தின் மூலம் பிட்சிலா ஸ்டார்ட்அப் இயங்கி வருகிறது. இப்போது, ஒஎன்டிசியின் முதல் மூன்று விற்பனையாளர் தளத்தில் ஒன்றாக மாறி இருக்கிறது.
இந்த பிட்சிலா ஸ்டார்ட்அப் நிறுவனமானது, மெக்டொனால்ட்ஸ் (McDonald) மற்றும் பிக்பாஸ்கெட் (BigBasket) போன்ற மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான பரிவர்த்தனைகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது, பேடிஎம் நிறுவனத்தின் புதிய பெயரான பை பிளாட்ஃபார்மின் கீழ் கையகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் பேடிஎம் என்ன செய்யப்போகிறது என்பது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்.


Click it and Unblock the Notifications