ஆமாம்.. ரூ.2000க்கு மேல் UPI வழியா பணம் அனுப்பினா கட்டணம்.. இந்த வகை பேமண்ட்க்கு சார்ஜ் உண்டு.. NPCI விளக்கம்!
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது ஒரு யுபிஐ (UPI) வழியாக ஒரு குறிப்பிட்ட வகை பணப்பரிவர்த்தனையை செய்யும் போது, ரூ.2000 க்கு மேலான தொகையை அனுப்பினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்து உள்ளது.
எந்த வகை யுபிஐ பேமண்ட்டிற்கு கட்டணம்? நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை யுபிஐ உடன் இணைத்து (Linking your credit card to UPI) பணம் செலுத்துபவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்த கட்டணம். இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் கூற்றுப்படி, ஒரு வாடிக்கையாளர் ரூபே கிரெடிட் கார்டை (RuPay credit card) பயன்படுத்தி ரூ.2,000 வரை யுபிஐ பேமண்ட் செலுத்தினால், அதற்கு எந்த கட்டணமும் பொருந்தாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

சாதாரண யுபிஐ பேமெண்ட்களுக்கு (Normal UPI Payments) வழக்கம் போல எந்த கட்டணமும் இருக்காது. அதாவது நீங்கள் எந்தவொரு கடையில் இருந்தும் ரூ.2000 வரை மதிப்புள்ள பொருட்களை வாங்கி யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், எந்த கட்டணமும் இருக்காது. அதேபோல ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.2000 க்குள் யுபிஐ பேமண்ட் செய்தாலும் எந்த கட்டணமும் இருக்காது.
ஆனால் ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ வழியாக நீங்கள் செலுத்தும் கட்டணம் ரூ.2,000 ஐ தாண்டினால், அது எம்டிஆர் (MDR) என்கிற வணிகர் தள்ளுபடி விகிதத்திற்கு (Merchant Discount Rate) உட்பட்டிருக்கலாம். இந்த கட்டணம் கடைக்காரருக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது, ஆனால் பல சந்தர்ப்பங்களில், கடைக்காரர்கள் அதை வாடிக்கையாளரிடமிருந்து தான் வசூலிப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு எம்டிஆர் கட்டணம் ஆனது பெரிய வணிகர்கள் மற்றும் பிராண்டட் கடைகளுக்கு பொருந்தும். சிறிய கடைக்காரர்கள், உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு இந்த தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக சாதாரண மக்களின் சிறிய கொள்முதல்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
அறியாதோர்களுக்கு ரூபே கிரெடிட் கார்டு உள்ள எந்தவொரு பயனரும் அதை தங்களுடைய யுபிஐ ஆப் உடன்.. அதாவது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களுடனும் இணைக்கலாம். இதை செய்த பின்னர், யுபிஐ ஆப் வழியாக ஒரு க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் (QR Code Scan) செய்வதன் மூலம் அவர்கள் கிரெடிட் கார்டிலிருந்து நேரடியாக பணம் செலுத்தலாம். அதாவது இது ஒரு டெபிட் கார்டு (Debit Card) போல செயல்படும்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு சில ஸ்மார்ட் டிப்ஸ் (Smart Tips For Credit Card Users):
- வட்டி (interest) மற்றும் அபராதங்களை (penalties) தவிர்க்க ஒவ்வொரு மாதமும் உங்கள் மொத்த பில்லை (Total bill) செலுத்துங்கள்.
- சரியான நேரத்தில் பணம் செலுத்துதல்களை பராமரித்து, உங்கள் கிரெடிட் லிமிட்டை (Credit limit) புத்திசாலித்தனமாக பயன்படுத்தி உங்கள் கிரெடிட் ஸ்கோரை (Credit score) அதிகரிக்கவும்.
- தவணை தேதியை (Due date) ஒருபோதும் தவறவிடாமல் இருக்க ஆட்டோ-டெபிட்டை (Auto-debit) செட் செய்யவும்
- பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் (Applicable interest rates and fees) மற்றும் கட்டணங்களை மதிப்பாய்வு செய்த பின்னரே இஎம்ஐ (EMI) விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
- உங்களிடம் பல கார்டுகள் இருந்தால், அவற்றின் வரம்புகள் (Limits), தவணைத் தேதிகள் மற்றும் கிடைக்கும் சலுகைகளை (Available offers) கவனமாக கண்காணிக்கவும்.


Click it and Unblock the Notifications








