Jio, Airtel, Vi-க்கு கிடுக்குப்பிடி.. இனி சாமானியர்களுக்கு மலிவு ரீசார்ஜ்.. TRAI உத்தரவால் நிம்மதி பெருமூச்சு!
ஒரு சாதாரண டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் தேதி நெருங்கும்போது பெரிய தலைவலி வந்துவிடுகிறது. வீட்டில், அலுவலகத்தில் என 24 மணி நேரமும் வைஃபை (Wi-Fi) வசதி இருந்தாலும், மொபைல் டேட்டா (Mobile Data) தேவையே இல்லை என்றாலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் வெறும் பட்டன் போன் தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், மாதத்துக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், டேட்டாவுடன் திட்டங்களையே ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
டேட்டா கட்டாயமாகிடுச்சா?
வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ்கள் (SMSs) மட்டுமே கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு சென்றாலும், ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) போன்ற அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மாதாந்திர வேலிடிட்டி கொடுக்கவில்லை. ஆரம்ப வேலிடிட்டியே 84 நாட்களுக்கு இருக்கிறது. வேலிடிட்டி அதிகமாகும்போது, விலையும் கூடிவிடுகிறது. ஆகவே, மாதத்துக்கு மட்டுமே ரீசார்ஜ் போதும் என்றாலும், அதற்கு மட்டுமே காசு இருந்தாலும், ரீசார்ஜ் செய்ய முடியாது.

ஆனால், மாதாந்திர வேலிடிட்டியுடன் கிடைக்கும் திட்டங்கள் டேட்டாவுடன் மட்டுமே கிடைக்கின்றன. விலையும் அதிகமாக இருக்கின்றன. உண்மையில் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை மாதாந்திர வேலிடிட்டியில் கொடுக்கும்போது, அதன் விலையை மலிவான நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. இதனாலேயே, கூடுதலாக வேலிடிட்டி கொடுக்கிறோம் என்ற பெயரில் விலையையும் கூடுதலாக வைத்து இருக்கின்றன.
முற்றுப்புள்ளி வைத்த டிராய்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) இதற்கு சரியான தீர்வை கொண்டுவந்துள்ளது தெரிகிறது. ஏர்டெல், ஜியோ, மற்றும் வோடபோன் (Vodafone Idea) ஆகிய முன்னணி நிறுவனங்கள் இனிமேல் கட்டாயமாக டேட்டா இல்லாத வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் (Voice and SMS) மட்டுமே கொண்ட திட்டங்களை அனைத்து வேலிடிட்டியிலும் (All Validity) வழங்க உத்தரவிட்டுள்ளது. இது ஒரு டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளபடியே பெரிய நிம்மதி என்றே சொல்லலாம்.
இப்படி யோசித்து பாருங்கள். ஒரு வாடிக்கையாளர் வெறும் மட்டும் வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய நினைத்தால் ஜியோவில் 84 நாட்கள் திட்டம் மட்டுமே ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இதன் விலை ரூ.448 ஆக இருக்கிறது. அதுவே மாதாந்திர வேலிடிட்டியை கொடுத்தால், விலை ரூ.150-க்கும் கீழ் சென்றுவிடும். இதேப்போலத்தான் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களிலும் கிடைக்கும். ஆகவே, மாத செலவு கஸ்டமர்களுக்கு குறையும்.

தேவை இருந்தால், அதிக வேலிடிட்டியை பயன்படுத்துவது தவறு கிடையாது. ஆனால், வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு மட்டுமே செல்லும் கஸ்டமர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு பாதிக்குப்பாதி விலை குறைவாக வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைத்தால், இது நல்லதாகவே பார்க்கப்படும். அதே நேரத்தில் இரண்டாவது சிம் (Dual SIM) பயன்படுத்துபவர்களுக்கும் இது அவசியமானதாகவும் இருக்கிறது. 2 சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்யும்போது, இது செலவை குறைக்கும்.
குறைந்த வேலிடிட்டி எப்படி?
டிராய் உத்தரவுபடி 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் போன்ற குறுகிய கால வேலிடிட்டியிலும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட திட்டங்கள் கொண்டு வரப்படலாம். வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே வாய்ஸ் ஒன்லி திட்டங்களை பெறும்போது, அதன் விலை மிகவும் மலிவாக இருக்கும். ஆகவே, டேட்டா கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. ஒரு மாதத்துக்கு வாய்ஸ் கால்கள் இருந்தால் போதும் என்றால், அதற்கு ஆப்ஷன் இருக்கும்.
டெலிகாம் நிறுவனங்களின் மனநிலை
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கின்றன. 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளில் வாய்ஸ் திட்டம் சரிபட்டு வராது என்றும், மலிவு விலை திட்டங்கள் வந்தால் மோசடியாக செய்யப்படும் கால்கள் பெருகிவிடும் என்றும் வாதங்களை முன்வைக்கின்றன. ஆனால், டெலிகாமில் மோசடி கால்கள், எஸ்எம்எஸ்களை கட்டுப்படுத்த வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்புதான்.
இதனால் பெரிய லாபம் இல்லை என்பதே உண்மை. இதனாலேயே வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் 2024ஆம் ஆண்டு முதலே கிடைத்தாலும், அதில் 28 நாட்கள், 30 நாட்களுக்கு வேலிடிட்டி இல்லை. வெறும் கண்துடைப்புக்காக கொடுத்து வருகின்றன. இதனாலேயே டிராய் இப்போது அக்டோபர் 21ஆம் தேதி 2026 முதல் இந்த வாய்ஸ் ஒன்லி திட்டங்களை அனைத்து வேலிடிட்டியிலும் கொடுக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
