PAN 2.0 : புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தேவை? எப்படி விண்ணப்பிப்பது? இதோ முழு விவரம்!
இந்தியாவில் ஆதார் கார்டு போலேவ பான் கார்டும் ஒரு முக்கிய அரசு ஆவணமாகக் கருதப்படுகிறது. அதாவது சில முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு இந்த பான் கார்டு தான் தேவைப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், ஆதார் அட்டையில் உள்ள ஆதார் எண் எப்படி உங்களின் அடையாள விபரங்களை வெளிப்படுத்துகிறதோ, அதேபோல் பான் அட்டை உங்களின் நிதி வரலாற்றைக் காண்பிக்கிறது.
இந்நிலையில் QR கோடு, பொது பான் எண், விரைவு சேவை என பான் 2.0 திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. எனவே ஏற்கனவே உள்ள பான் கார்டை என்ன செய்வது, புது பான் கார்டை எப்படி வாங்குவது என பல கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். கவலை வேண்டாம், இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், இந்த புதிய கார்டுக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதைச் சற்று விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பான் 2.0 என்பது புதிய பான் கார்டு விநியோகிக்கும் திட்டம் அல்ல. அதாவது இது நம்மிடம் இருக்கும் பான் கார்டை அப்டேட் செய்யும் திட்டம் மட்டுமே. இதனால் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெறும் அப்டேட்டுக்கு விண்ணப்பித்தால் போதும்.
அதேபோல் பான் 2.0-க்கு என்று ஒரு புதிய வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வலைதளம் அறிமுகமானதும் அதில் கேட்கும் தகவல்களைக் கொடுத்து, ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சப்மிட் கொடுத்து QR கோடுடன் கூடிய புதிய பான் அட்டை விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? அடையாள சான்று தேவைப்படும், அதாவது ஆதார், பாஸ்ட்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அட்டை தேவைப்படும். அதேபோல் முகவரி சான்றும் தேவைப்படும், அதன்படி பாஸ்புக், கேஸ் சிலிண்டர் போன்ற பில்கள், வாடகை பத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும் பிறந்த தேதி சான்றும் தேவைப்படும், அதாவது பிறப்பு சான்றிதழ், டிசி, பாஸ்போர்ட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலே கூறிய ஆவணங்கள் தற்போதைய தேதிக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். அதாவது இந்த தகவல்கள் தான் புதிய பான் அட்டையில் இடம்பெற உள்ளது. எனவே எதாவது சான்று அப்டேட்டாக இல்லையென்றால், இப்போதே அப்டேட் செய்துகொள்வது நல்லது.

அதேபோல் 2023-ம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு அரசு நிறுவனங்கள் பான் கார்டை பொது அடையாளமாக மாற்ற முடிவு செய்தது. எனவே தான் அதற்கு ஏற்ப புதிய பான் கார்டு அமைப்பு கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக இதில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தாலும் தவறான பான் நம்பரை கொடுத்திருந்தாலும் அரசு துறைகள் தெளிவாகக் கண்டறிந்து விடும்.
அதுவும் பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், 2 பான் கார்டு பெறுவதும் மிகப் பெரிய குற்றமாகும். இதற்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் வரி விதிப்பு நிபுணர்கள் வெளியிட்ட தகவல்களின்படி, பான் கார்டு 2.0 திட்டத்தின் கீழ் டைனமிக் கியூஆர் குறியீடு போன்ற சிறப்பு பாதுகாப்பு அம்சங்களோடு பான் கார்டு வர இருக்கிறது, இது டூப்ளிகேட் பான் கார்டுகளையும், தவறான தகவல்களையும் தானாகவே கண்டறிந்து விடும் என்று கூறப்படுகிறது.
photo credit: tv9hindi


Click it and Unblock the Notifications