ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி டிக்கெட் முன்பதிவு செய்வது சிரமம் இருக்காது..ரயில்வே அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
இந்திய ரயில்வே அமைப்பு பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மூன்று கோடி ஐஆர்சிடிசி (IRCTC) கணக்குகளை முடக்கி இருப்பதாக இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள மக்கள் விமானம், பேருந்து போன்றவற்றில் பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது குறைந்த கட்டணம் மற்றும் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு வேகமாகச் செல்ல முடியும் என்பதால் ரயில் பயணம் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனாலும் நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு டிக்கெட் முன்பதிவில் பல சிரமங்கள் இருந்தன. அதாவது ஏஜென்ட்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை அதிகமாக முன்பதிவு செய்துவிடுவதால் சாதாரணமான மக்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருந்தன. ஆகவே தான் இந்திய ரயில்வே அமைப்பு தற்போது தட்கல் டிக்கெட் (tatkal ticket) மற்றும் அனைத்து விதமான டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் இணைந்து முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தது.
அதுவும் ஆன்லைன் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அடிப்படையிலான ஓடிபி உள்ளீடு செய்தால் மட்டுமே இனி டிக்கெட் முன்பதிவு ஆகும் என்பதையும் கூட நடைமுறைக்குக் கொண்டு வந்தது இந்திய ரயில்வே அமைப்பு. குறிப்பாக இந்த புதிய நடைமுறைகள் மூலம் டிக்கெட் முன்பதிவில் நடைபெற்ற முறைகேடுகள் குறைந்துள்ளது என இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த மூன்று கோடி ஐஆர்சிடிசி கணக்குகளை முடக்கி இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தட்கல் டிக்கெட் கிடைப்பது பயணிகளுக்கு எளிமையானதாக மாறி இருக்கிறது என மத்திய ரயில்வே அமைச்சர் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் தட்கல் முன்பதிவு
கடந்த டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஆன்லைன் தட்கல் முன்பதிவில் ஆதார் ஓடிபி முறை 322 ரயில்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 65 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதவிர டிக்கெட் முன்பதிவு மையங்களில் உள்ள தட்கல் முன்பதிவுக்கு ஆதார் ஓடிபி முறை 216 ரயில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் 96 முக்கிய ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் கிடைப்பது 95 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட பின்பு தான் பல்வேறு பயனர்களின் கணக்குகளை மறு ஆய்வு செய்ததாகவும் இதில் சந்தேகத்திற்கு இடமான போலியான கணக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பை விட வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய ரயில்வே அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக ரயில்வே அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








