இது உண்மையா?- இந்த பழைய நாணயம் இருந்தால் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்- ஆர்பிஐ விடுத்த எச்சரிக்கை!
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பது மற்றும் வாங்குவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பங்கள் வளரந்து வரும் இந்த காலக்கட்டத்தில் அதை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமா அந்த அளவிற்கு அதன் பாதுகாப்பு அம்சத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர், லோகோவை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக கட்டணங்கள், கமிஷன், வரி என கூறி மோசடி செயல்கள் நடந்து வருவதாக ஆர்பிஐ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கட்டணங்கள், கமிஷன்கள் கோரி ஏமாற்றம்
இந்திய ரிசர்வ் வங்கி இதுபோன்ற விஷயங்களை கையாளுவதில்லை எனவும் எந்த விதமான கட்டணங்கள், கமிஷன்களையும் கோருவது இல்லை என ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. அதேபோல் இத்தகைய பரிவர்த்தனைகளில் அதன் சார்பாக கட்டணம், கமிஷன் வசூலிக்க எந்தவொரு நிறுவனம் மற்றும் நபருக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

வங்கியின் பெயரை பயன்படுத்தி மோசடி
ரிசர்வ் வங்கி மக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி செய்யப்படும் மோசடி செயல்களில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகள்
பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு மவுசு அதிகம் என தெரிவிக்கப்பட்டு உங்களிடம் பழைய நாணயங்கள் இருந்தால் அதற்கு லட்சம் ரூபாய் கொடுக்குறோம் என ஆன்லைனில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின்றன. சில இடங்களில் இதற்கான முறையான பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.

பழைய நாணயங்களுக்கு லட்சம் ரூபாய்
ஆனால் ஆன்லைனில் பழைய நாணயங்களுக்கு லட்சம் ரூபாய் என கூறி ஆசைகாட்டி ஏமாற்று செயல் அரங்கேறி வருகிறது. பழைய நாணயங்களை ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் கொடுத்து வாங்கிக் கொள்கிறோம் ஆனால் அதற்கு முன்னதாக வரி செலுத்த வேண்டும், கமிஷன் கொடுக்க வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பல மோசடிகள்
ஆன்லைனில் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. சீன ஹேக்கர்கள் எஸ்பிஐ பயனர்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர். கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பி அதில் ஒரு மர்மமான வெப்சைட் லிங்கையும் அனுப்புகின்றனர், இந்த மர்ம வெப்சைட் லிங்க் அதிகாரப்பூர்வ வங்கி லிங்க் போன்றே உள்ளது என கூறப்படுகிறது. ஃபிஷிங் மோசடி மூலம் ஹேக்கர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்களை குறிவைக்கின்றனர்.

கேஒய்சி அப்டேட்
கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

பரிசுகள் கொடுப்பதாக மோசடி
அதேபோல் வெளியான தகவலின்படி வாட்ஸ் அப்-ல் எஸ்பிஐ வங்கி ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதாக போலி மெசேஜ்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து தகவல்களும் மோசடி செயல்கள் என்பதால் இதை நம்ப வேண்டாம் என இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்தியாவில் இணைய பயனர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கடந்த 1 ஆண்டில் மட்டும் ஹேக்கிங்கிற்கு பலியாகி இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications