ஆன்லைன் ரம்மிகளுக்கு கும்மி அடித்த அமைச்சர்.. அக்.1 முதல் அமலுக்கு வரும் புது ரூல்ஸ்!
ஆன்லைன் மணி கேம்களுக்கு (Online Money Games), அதாவது பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை மற்றும் புதிய விதிகள் (New Rules) குறித்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் (Information technology minister) ஆன அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களுக்கான தடை (Ban on Online Money Games) ஆனது அக்டோபர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும், அதே நாளில் ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் (Promotion and Regulation of Online Games Act - PROGA) விதிகள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஆன்லைன் மணி கேமிங் துறைக்கு அதிக நேரம் தேவைப்பட்டால், நாங்கள் நிச்சயமாக ஒரு ஆலோசனை அணுகுமுறையை பரிசீலிப்போம், அது எங்கள் நிலையான அணுகுமுறையாகும். ஆனால், இந்த நேரத்தில், புதிய சட்டத்தை வருகிற அக்டோபர் 1, 2025 முதல் செயல்படுத்த இலக்கு வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் கூறியுள்ளார்
நாங்கள் தொழில்துறையுடன் ஈடுபட்டிருந்தோம், அவர்களுடன் பலமுறை விவாதித்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம், மேலும் அவரது அமைச்சகமும் வங்கிகளுடனும் கலந்துரையாடியது. சட்டத்தின் இறுதி வெளியீட்டிற்கு முன்னதாக, ஐடி அமைச்சகம் கேமிங் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஒரு கடைசி ஆலோசனையை நடத்தும் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசுகையில், புதிய விதிமுறைகள் குறித்து பொது ஆலோசனை நடத்தப்படாது, ஏனெனில் அது தேவையில்லை. சட்டமும் விதிகளும் மிகவும் தெளிவாக உள்ளன. அவர்கள் (கேமிங் துறை) சொன்ன ஒரே விஷயம், முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிப்பதே ஆகும், இதனால் அவர்கள் தயாராக முடியும் என்று மூத்த ஐடி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நினைவூட்டும் வண்ணம் பிஆர்ஓஜிஏ (PROGA) திட்டமானது, கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி மக்களவையிலும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராஜ்யசபாவிலும் மழைக்கால கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டது, ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது. இந்த சட்டம் அனைத்து வகையான ஆன்லைன் பண விளையாட்டுகளையும் தடை செய்கிறது, இதில் பணமாக மாற்றக்கூடிய கேஷ் ரிவார்ட்ஸ் (Cash Rewards) அல்லது விர்ச்சுவல் காயின்களை (Virtual Coins) வழங்குவது அடங்கும்.
மறுகையில் இந்த புதிய விதிமுறைகளானது இ-ஸ்போர்ட்ஸ், பணம் சம்பந்தப்படாத திறன் சார்ந்த கேம்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு ஆன்லைன் செயல்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த புதிய சட்டத்தை மீறி, ஆன்லைன் மணி கேம்ஸை வழங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஆன்லைன் மணி கேம்ஸ் தளங்களை விளம்பரப்படுத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எச்டி (HT) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடி அமைச்சகத்திற்கும், பங்குதாரர்களுக்கும் இடையிலான கடைசி ஆலோசனை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், அமைச்சர் வைஷ்ணவ், நிறுவனங்களுக்கு போதுமான மாற்ற கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அந்த காலகட்டத்தில் எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார். மேலும் உள்ளூர் அதிகாரிகளால் ஏற்படும் துன்புறுத்தல்களை நேரடியாக அமைச்சகத்திற்கு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய நடவடிக்கை, புதிய விதிமுறைகள் மற்றும் புதிய சட்டம் ஆனது பயனர்களை பாதுகாப்பதையும், வெளிநாட்டு ஆபரேட்டர்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு ரியல்-மணி கேமிங் துறையின் மாற்றத்தையும் ஆதரிக்கிறது. அரசாங்கம் இந்த துறையை "பொறுமையாகக் கையாளும்" என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








