இந்தியாவில் ஷட்டவுன் ஆகிறதா OnePlus நிறுவனம்? CEO ராஜினாமா செய்ததன் உண்மை பின்னணி!
2026 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல முரண்பாடான செய்திகள் வெளிவந்துன. 2026 ஜனவரி மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் உலகளவில் தனது செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் செய்தி வெளியிட்டது. பின்னர் அந்த தகவல் ஒன்பிளஸ் நிறுவனத்தால் உடனடியாக மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் தற்போது, ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறக்கூடும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்டும் சில புதிய நிகழ்வுகள் நடந்துள்ளன. நேற்று, ஒன்பிளஸ் இந்தியாவின் (OnePlus India CEO) தலைமை செயல் அதிகாரி ராபின் லியு, "தனது தனிப்பட்ட ஆர்வங்களை தொடர" தனது பதவியில் இருந்து விலகியதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்த தகவல் வெளியான வேகத்தில், இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனம் மூடப்படவுள்ளதாக வதந்திகள் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ்-ன் இந்திய செயல்பாடுகளை வழிநடத்தி வந்த ராபின் லியு-வின் திடீர் வெளியேற்றமானது, உலகின் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், இந்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பி, புதிய யூக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யூகங்களுக்கு மறுபடியும் முற்றுப்புள்ளி: ராபின் லியு ராஜினாமா குறித்து ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஒன்பிளஸ் இந்தியாவிற்கு ராபின் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அவர் தனது தனிப்பட்ட ஆர்வங்களை தொடர செல்கிறார், மேலும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறியதுடன், "உள்ளூர் உத்தி மற்றும் வணிக தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டு, ஒன்பிளஸ் இந்தியாவின் செயல்பாடுகள் தொடரும்" என்றும் கூறியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அறிக்கை வெளிப்படையாகவே இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஷட் டவுன் ஆகாது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் தி எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கை ஒன்று, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த நிலைமை சற்று சிக்கலானது என்று கூறுகிறது. லியு சாதாரணமாக வெளியேறவில்லை என்று கூறுகிறது!
சமீபத்தில் ஒப்போ (OPPO) குழுமத்திற்குள் துணை பிராண்ட் (அதாவது ஒன்பிளஸ் பிராண்ட்) செயல்பாடுகளை மேற்பார்வையிட பதவி உயர்வு பெற்ற ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஸ்கை லீயிடம் ரிப்போர்ட் செய்யுமாறு லியு கேட்டு கொள்ளப்பட்டார் என்றும் அந்த அறிக்கை கூறியது.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முன்பு லியு மற்றும் லீ ஆகிய இருவரும் சமமானவர்களாக கருதப்பட்டனர், ஒவ்வொருவரும் தங்களின் சொந்த துணை பிராண்டை சுயாதீனமாக நிர்வகித்து வந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. இதன் விளைவாகவே ராபின் லியு ராஜினாமா செய்துள்ளது போல் தெரிகிறது. ஆனால் இதற்காக ஒன்பிளஸ் இந்தியாவின் செயல்பாடுகள் நிற்காது.
இந்த விஷயத்திற்கு மேலும் நம்பகத்தன்மையை சேர்ப்பது என்னவென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவது தான். இந்த ஸ்மார்ட்போனில் 9000mAh பேட்டரி, 165fps கேமிங் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக ஒன்பிளஸ் இந்தியா எங்கும் செல்ல போவதில்லை. ஆனால் நாட்டின் நிறுவன கட்டமைப்பு மற்றும் உத்தியில் சில மாற்றங்களை நாம் காணலாம். லியுவின் விலகலுக்கு பிறகு, ஒன்பிளஸ் இந்தியாவை அடுத்தது யார் கவனிப்பார்கள் என்பது குறித்து ஒன்பிளஸ் இன்னுமும் எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. விரைவில் அப்டேட் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








