OnePlus போன்களுக்கு வரும் Glacier Battery.. லோ பேட்டரி, அடிக்கடி சார்ஜ் செய்யும் அவஸ்தைக்கு குட்பை!
நேற்று (ஜூன் 18) இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மிகுந்த நாளாக இருந்தது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஆன நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lite 5G) மாடலை ஜூன் 18-ல் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ஜூன் 24 ஆம் தேதியன்று அறிமுகமாகும் என்கிற தகவல் மட்டுமே வெளியிடப்பட்டது. கூடவே இன்னொரு சுவாரசியமான தகவலும் வெளியானது. அது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய கிளேசியர் பேட்டரி டெக்னாலஜி (Glacier Battery technology) ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் மொபைல் சிப்செட்கள் ஆனது முந்தைய சிப்செட்களை விட மிகவும் சக்திவாய்ந்தவைகளாக உள்ளன. ஆனால் பேட்டரி திறன் என்று வரும்போது ஒரு பெரிய அளவிலான தொழில்நுட்ப முன்னேற்றம் இன்னும் நடந்தபாடில்லை. இந்த நிலைமை விரைவில் மாறும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனம் 'கிளேசியர் பேட்டரி' என்கிற புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

சீன சமூக ஊடக தளமான வெய்போ வழியாக கிடைத்துள்ள தகவல்களின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பம் ஆனது அடிக்கடி சார்ஜ் செய்வது, லோ பேட்டரி குறித்த கவலை மற்றும் பவர் பேங்க்களை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் போன்ற சிக்கல்களை சரிசெய்ய உள்ளது.
இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம், உலகின் மிகப்பெரிய பேட்டரி மேக்கர்களில் ஒன்றான சிஏடிஎல் (CATL - Contemporary Amperex Technology Co. Limited) உடன் இணைந்துள்ளது. மேலும் இந்த புதிய கிளேசியர் பேட்டரி டெக்னாலஜி பற்றிய கூடுதல் விவரங்கள் ஆனது ஜூன் 20 ஆம் தேதி அன்று பகிரப்படும் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு, கிளேசியர் பேட்டரி டெக்னாலஜி ஆனது எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் முதலில் இடம்பெறும் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை. இருப்பினும் இது பெரும்பாலும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro) ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் 6100எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும்; அது இரண்டு 2,970mAh பேட்டரிகளுடன் டூயல் செல் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பெரிய பேட்டரியாக இருந்தாலும் கூட ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 9மிமீ தடிமனை விட குறைவாகவே இருக்கும் என்றும், இது சுமார் 30 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய கிளேசியர் பேட்டரி டெக்னாலஜி ஆனது தற்போது சந்தையில் இருப்பதை விட.. அளவில் சிறிய அதேசமயம் அதிக ஆற்றல் கொண்ட பேட்டரிகளை உருவாக்க உதவும் என்பது போல் தெரிகிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, ஸ்மார்ட்போன் துறைக்கு இது மிகவும் தேவையான ஒரு முன்னேற்றமாக இருக்கலாம், கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டரி திறன் ஆனது ஸ்மார்ட்போன் துறைக்கான ஒரு முக்கிய சவாலாக இருந்து வருகிறது. ஒன்பிளஸ்-ன் கிளேசியர் பேட்டரி டெக்னாலஜியும், அதை தொடர்ந்து வரும் மற்ற நிறுவனங்களின் "கிளேசியர் பேட்டரி போன்றே" டெக்னாலஜிகளும் இதை சீர்செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜூன் 20 ஆம் தேதி அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது தற்போது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா, 80W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








