இந்தியாவில் Starlink-ஐ முடக்க முயற்சி? பணக்காரர்கள் மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு.. இதோ முழு விவரம்..
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk), ஸ்டார்லிங்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மொபைல் சிக்னல் கிடைக்காத தொலைதூர பகுதிகளிலும் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்துக்குப் பூர்வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சேவையைத் தொடங்குவதற்கு மேலும் சில ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

அதுவும் இந்த ஸ்டார்லிங்க் இணையச் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால், மலைப்பகுதிகள், காடுகள் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளிலும் இணைய இணைப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொபைல் சிக்னல் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் பகுதிகளுக்கும் தடையின்றி இணையச் சேவை கிடைக்கும்.
குறிப்பாக செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்குவதற்கு இந்திய அரசிடம் சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளன. அந்த நெறிமுறைகளில் சிலவற்றுடன் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் திட்டங்கள் இன்னும் முழுமையாகப் பொருந்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தியாவில் தனது இணையச் சேவையை முழுமையாகத் தொடங்குவதில் அந்த நிறுவனத்துக்குத் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர், இந்தியாவுக்கு ஸ்டார்லிங்க் இணையச் சேவை தேவை எனக் கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் உள்ள 11,256 கிராமங்களில் 4ஜி சேவை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், இந்திய மக்களுக்கான இணையச் சேவையில் சில பணக்காரர்கள் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடைகள் ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவதைத் தடுப்பது இந்திய மக்களுக்கு எதிரான செயல் என்றும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்கள் அமைத்து, தரைவழி கேபிள்கள் மூலம் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு அதிகளவு செலவும் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படும். ஆனால், செயற்கைக்கோள் அடிப்படையில் இயங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையில் இதுபோன்ற சிக்கல்கள் குறைவாக இருப்பதால், எளிதாக இணைய இணைப்பை வழங்க முடியும்.

மேலும் வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில் செல்போன் கோபுரங்கள் மற்றும் தரைவழி இணைய கட்டமைப்புகள் சேதமடைந்து தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம். ஆனால், செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்டார்லிங்க் சேவை மூலம் இதுபோன்ற அவசரக் காலங்களிலும் இணைய இணைப்பை வழங்க முடியும்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை மட்டும் தொடங்கப்பட்டால், இணைய வசதி குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் இணைய இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், மலை மற்றும் காடு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் தடையின்றி இணையச் சேவையைப் பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தேவையான அனைத்து ஒப்புதல்களும் கிடைத்த பிறகே இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.


Click it and Unblock the Notifications
