அக்.1 முதல் ரேஷன், கேஸ் சிலிண்டருக்கு 2 புது ரூல்ஸ்.. 3 மாசம் அப்புறம் சிக்கல்.. என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?
எல்பிஜி கேஸ் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. 6 மாதங்களுக்கு மேல் ரேஷன் கார்டு (Ration Card) பயன்படுத்தாதவர்கள் மற்றும் எல்பிஜி இணைப்பில் பயோமெட்ரிக்கை அப்டேட் செய்யாதவர்கள் சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இப்போது இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ரேஷன் கார்டு மற்றும் எல்பிஜி கேஸ் இணைப்பு ஆகியவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான சேவைகளாக உள்ளன. குறிப்பாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு தொடர்பான அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு சரியான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இருப்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் எல்பிஜி இணைப்பில் உள்ள தகவல்களை சரிபார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரேஷன் கார்டு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயம், நீண்ட காலமாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் குடும்பங்களுக்கு வரும் சிக்கலாகும். தொடர்ந்து பல மாதங்களாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெறாமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டு செயல்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்வது நல்லதாகும்.
ஏனென்றால், 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் இருந்தால் அந்த கார்டை ரத்து செய்ய இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த ரத்து நடவடிக்கை செயல்பட இருக்கிறது. ஆகவே, இதுபோன்று பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய ரேஷன் கார்டு விவரங்களை உடனடியாக வெரிஃபிகேஷன் செய்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் வேறு இடத்தில் வசிப்பது, வேலை காரணமாக வெளியூரில் இருப்பது அல்லது ரேஷன் பொருட்கள் தேவையில்லை என்பதால் கடைக்கு செல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் கார்டு நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்தாலும் இது பொருந்தும்.
இதன் காரணமாக முடக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தங்களின் தகுதியை நிரூபிப்பதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கார்டுதாரர்கள் இந்த நடைமுறையை முடிக்கலாம். இந்த கால அவகாசத்திற்குள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் கைவிரல் ரேகை பதிவு நடைமுறையை முறையாக முடிக்க வேண்டும்.
இந்த கைரேகை பதிவு நடைமுறை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டு முடக்கப்பட்டுள்ள குடும்பங்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று தேவையான சரிபார்ப்பு மற்றும் கைரேகை பதிவு நடைமுறைகளை முடித்துக் கொள்வது நல்லது.
இதேபோல், எல்பிஜி கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களும் தங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை வெரிஃபிகேஷன் செய்துகொள்ள வேண்டும். கேஸ் இணைப்புடன் ஆதார் மற்றும் பயோமெட்ரிக் தொடர்பான விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியமாகும். பயோமெட்ரிக் அப்டேட் செய்யாதவர்கள் அருகிலுள்ள எல்பிஜி அலுவலகத்தில் வெரிஃபிகேஷன் செய்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பு தேவைப்பட்டால், கேஸ் ஏஜென்சியில் அதற்கான நடைமுறையை முடித்துக் கொள்ளலாம். பொதுவாக ஆதார் விவரங்கள் மற்றும் கேஸ் கனெக்ஷன் தொடர்பான தகவல்கள் தேவைப்படலாம். எனவே, கேஸ் புக், கன்ஸ்யூமர் எண் மற்றும் ஆதார் போன்ற ஆவணங்களை தயாராக வைத்திருப்பது உதவியாக இருக்கும்.
மேலும், எல்பிஜி இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதையும் வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். கேஸ் புக்கிங், டெலிவரி மற்றும் பிற முக்கியமான தகவல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வருவதால், பழைய அல்லது பயன்படுத்தாத எண்ணை வைத்திருப்பவர்கள் அதை மாற்றுவது தொடர்பாக விநியோகஸ்தரை அணுகலாம்.
ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், ஆதார் இணைப்பு மற்றும் பிற அடிப்படை விவரங்களிலும் ஏதேனும் மாற்றம் இருந்தால், அவற்றையும் சரிபார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக திருமணம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல் அல்லது நீக்கம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட துறையின் வழியாக தேவையான புதுப்பிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்களை கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுடைய கார்டின் தற்போதைய நிலையை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாக 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் கார்டை பயன்படுத்தாதவர்கள் தங்களுடைய கார்டு முடக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அருகில் உள்ள ரேஷன் கடையை அணுகலாம்.


Click it and Unblock the Notifications
