5வது இடத்தில் சிகரெட் கடை.. எந்தெந்த கடைகளில் Google Pay, PhonePe வழியாக அதிக UPI பேமண்ட் நடக்குது தெரியுமா?
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India) தரவுகளை அடிப்படையாக கொண்டு பிஸ்னஸ் லைன் வலைத்தளம் ஆனது யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் குறித்த ஒரு சுவாரசியமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
வெளியான அறிக்கையானது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களின் வழியாக எங்கெல்லாம்.. அதாவது எந்தெந்த கடைகளில், எந்தெந்த விஷயங்களுக்காக யுபிஐ சேவையின் கீழ் பயனர்கள் அதிகமாக பணம் செலுத்தி உள்ளனர் என்கிற விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

அதன்படி மளிகைப் பொருட்கள் (Groceries), உணவகங்கள் (Restaurants), மொபைல் நெட்வொர்க் பில்கள் (Mobile network bills) மற்றும் சேவை நிலையங்கள்), கேமிங் ஆப்கள் (Gaming apps) மற்றும் சிகரெட் கடைகளில் (Cigarette shops) பணம் செலுத்துவதற்காகவே பெரும்பாலான யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
என்பிசிஐ ஆனது முதன்முறையாக, வணிகர் வகை வாரியாக யுபிஐ தரவை (UPI data by Merchant category) வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் மளிகைப் பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் ரூ.64,882 கோடி மதிப்புள்ள 3 பில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் துரித உணவு உணவகங்களில் 1.22 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன; அதே நேரத்தில் மற்ற உணவகங்களில் 1.15 பில்லியன் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மதிப்பு வாரியாக, பெரும்பாலான பயனர்கள் தங்கள் லோன்கள், கிரெடிட் கார்டு மற்றும் பை நொவ் பே லேட்டர் வசதியின் கீழ் தங்கள் பில்களை செலுத்த யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இதன்கீழ் கடந்த ஜூலை மாதத்தில், யுபிஐ சேவையை பயன்படுத்தி ரூ.93,857 கோடி நிலுவைத் தொகைகள் தீர்க்கப்பட்டுள்ளன
புதிய, மிகவும் துல்லியமான தரவுகள் நம் கையில் இருப்பதால், பூஜ்ஜிய வணிக தள்ளுபடி விகிதம் (Merchant discount rate - MDR) அடிப்படையிலான யுபிஐ மாடலின் மிகப்பெரிய பயனாளிகளை பிரதிபலிக்கும் வகையில், என்பிசிஐ இப்போது தனிப்பட்ட வணிகர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.20 - ரூ.40 லட்சம் என்கிற அளவில் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யும் சிறு வணிகங்கள் ஆனது ஜிஎஸ்டி வரி கண்காணிப்பின் கீழ் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) "மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் யுபிஐ பரிவர்த்தனைகளின் அடிப்படையில் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை" என்று கூறி உள்ளார். மேலும் அவர் கர்நாடகாவிற்கான மத்திய வரி அமைப்புகள் (Central tax formations for Karnataka) அளித்த இலை தரவுகளையும் பகிர்ந்து கொண்டார்
அதன்படி 2024 - 25 ஆம் ஆண்டில் ரூ.39,577 கோடி மதிப்புள்ள 1,254 ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகள் (GST Evasion cases) பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 - 24 ஆம் ஆண்டில் ரூ.7,202 கோடி மதிப்புள்ள 925 வழக்குகளையும், 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ.25,839 கோடி மதிப்புள்ள 959 வழக்குகளையும் விட அதிகமாகும்.
இந்திய அளவில் மொத்த வருவாய் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருந்தால், சிறு வணிகங்கள் சரக்கு விநியோகத்தில் (அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் வணிகம் செய்தால் ரூ.20 லட்சம்) ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும். சேவைகள் வழங்கல் அல்லது கலப்பு விநியோகத்தில் ரூ.20 லட்சம் (மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் வணிகம் செய்தால் ரூ.10 லட்சம்) செலுத்த வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








