ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!
டிஜிட்டல் இந்தியா கொள்கையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றே கூறலாம். தற்போது பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் பேமெண்ட் மூலமாகவே நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி பல அரசு அலுவலக பணிகள் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் எளிதில் சேவைகளை பெற அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெறக்கூடிய 18 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை இனி மக்கள் ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல் முறையின் படி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழில் முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், தற்காலிக மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம் ஆகிய பணிகள்.

மேலும், முழுவதுமாக கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், டூப்ளிகேட் வாகனப் பதிவு சான்றிதழ், வாகனப் பதிவுக்கான என்ஓசி சான்று, மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகனப் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பம், உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல், வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகனத்தின் உரிமத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்திற்கு சென்று எல்எல்ஆர்(பழகுனர் உரிமம்), நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இதில் பூர்த்தி செய்யலாம். அதேபோல் இதற்கான கட்டணத்தை பயனர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.

parivahan.gov.in என்ற இணையதளத்தில் வாகனச் சான்றிதழ் பெயர் மாற்றம், சாலை வரி, வாகன தகுதி வரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் விண்ணப்பித்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆன்லைன் படிவம் பூர்த்தி செய்த பிறகு கட்டணங்களையும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம். வங்கி இணைய சேவைஸ டெபிட் அல்லது கிரெடிட் கார்டு உள்ளிட்டவைகள் மூலமாக விண்ணப்பத்திற்கு கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்தி ரசீதை அதில் பெற்றுக் கொள்ளலாம்.

வாகன பழகுனர் உரிமம் பெரும்போது ஆன்லைன் மூலம் பெரும் ஒப்புகை சீட்டு, ஆன்லைனில் பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்று வாகனம் ஓட்டிக்காட்டும் தேர்வில் கலந்து கொண்டு உரிமத்தினை பெறலாம். அதேபோல் அதிகாரப்பூர்வ ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் பயிற்சி எடுத்து இந்தபணிகளை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications