நவம்பர் 1 முதல் புதிய விதிகள்.. LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் யுபிஐ வரை.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
நவம்பர் 1 (November 1) முதல் நாடு முழுவதும் பல புதிய விதிமுறைகள் (New Rules) அமலுக்கு வர உள்ளன. குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முதல் யுபிஐ வரை பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
எல்பிஜி சிலிண்டர் விலை
இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் மற்றும் விமான எரிபொருளான ஏடிஎஃப் (ATF) விலைகளை மறுஆய்வு செய்கின்றன. இந்த விலை மாற்றங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களைப் பாதிக்கக்கூடும். இருப்பினும், சந்தை நிலவரத்தைப் பொறுத்து சில மாதங்களில் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்கலாம்.

அக்டோபர் 1-ம் தேதி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.71.50 உயர்த்தப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல், விமான எரிபொருளான ஏடிஎஃப் (ATF) விலையும் லிட்டருக்கு ரூ.16 அதிகரிக்கப்பட்டது. இதனால், அதன் விலை ரூ.121-ல் இருந்து ரூ.137 ஆக உயர்ந்தது. ஆகவே வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்?
வணிகம் சார்ந்த யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது. ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை MDR கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது அல்லது கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும்போது எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது, சொந்த வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்றுவது போன்ற தனிநபர் யுபிஐ பரிவர்த்தனைகள் வழக்கம்போல இலவசமாகவே தொடரும். எனவே, சாதாரண யுபிஐ பயனர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டணம் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அறிவிப்பு தீபாவளிக்குப் பிறகு, அதாவது நவம்பர் 8-க்குப் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய விதிமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வர்த்தகர்கள் கவனித்து வருவது அவசியமாகும்.
போலி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி
நவம்பர் 1 முதல், செல்போனுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரைக் காட்டும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. CNAP (Calling Name Presentation) எனப்படும் இந்தச் சேவையின் மூலம், அழைப்பவரின் உண்மையான பெயர் செல்போன் திரையில் தோன்றும். முதற்கட்டமாக 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளில் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு, அழைப்பவரின் பெயருக்குப் பதிலாக "International Call" என்ற வாசகம் திரையில் காட்டப்படும். அதேபோல், வணிக மற்றும் விளம்பர அழைப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ வர்த்தகப் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் போலி அழைப்புகள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் தேவையற்ற விளம்பர அழைப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் கண்டு, மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.


Click it and Unblock the Notifications
