உங்க வீட்டில் 5 பேர் இருக்காங்களா? ரேஷன் கார்டு பாணியில் புதிய ஆதார் ஆப்.. UIDAI ஒரு முடிவோட தான் இருக்கு!
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது புதிய ஆதார் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு அவர்களின் அடையாளம் தொடர்பான தரவுகளை அப்டேட் செய்வதை எளிமைப்படுத்துவதோடு சேர்த்து மக்கள்தொகை விவரங்களை புதுப்பிப்பதற்கான விருப்பங்களின் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது.
ரேஷன் கார்டு பாணியில்: மெய்டி (MEITY) என்கிற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, புதிய ஆதார் ஆப் ஆனது 5 குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை ஒரே இடத்தில் சேமிக்க அனுமதிக்கும். இதன்கீழ் முழுமையான அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளவதற்கான முழு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். மேலும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக ஒன் கிளிக் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் அம்சத்தையும் வழங்கும்.

சிம்பிள் ஆகும் அப்டேட் செயல்முறை: இந்த புதிய ஆதார் ஆப் ஆனது மொபைல் எண் புதுப்பிப்புகள், முகவரி மாற்றங்கள் மற்றும் க்யூஆர் அடிப்படையிலான அங்கீகாரம் மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு போன்ற முக்கிய பணிகளையும் எளிதாக்கும் - இது ஹோட்டல்கள், விமான நிலையங்கள், குடியிருப்பு சங்கங்கள், நிகழ்வுகள் மற்றும் பலவற்றில் ஆதார் பயன்பாட்டை தடையில்லாத ஒன்றாக மாற்றும்!
பேப்பர்லெஸ் ப்ராசஸ்: புதிய ஆதார் ஆப் ஆனது காகிதமற்ற அடையாளப் பகிர்வை எளிதாக்கும் என்றும் இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. இது - முழுமையான அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதார் தகவல்களை சரிபார்த்து, பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முக்கிய விருப்பமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 5 குடும்ப உறுப்பினர்கள் வரையிலான ஆதார் விவரங்களை புதிய ஆதார் ஆப்பில் வைத்திருப்பது, ஆதாரின் எந்த தரவு பகிரப்படுகிறது என்பதில் முழு கட்டுப்பாடு, முழுமையான அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதார் தகவலை வெளியிடுவதற்கான நெகிழ்வுத்தன்மை, மேம்பட்ட பாதுகாப்பிற்காக ஒரு கிளிக்கில் பயோமெட்ரிக் லாக்/அன்லாக் மற்றும் தொந்தரவு இல்லாத மொபைல் எண் மற்றும் முகவரி புதுப்பிப்பு விருப்பங்கள் போன்ற அம்சங்கள் போன்ற பல நன்மைகளை ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும்.
ஆதார் 2.0: புதிய ஆதார் ஆப் ஒருபக்கம் இருக்க ஆதார் 2.0 வழியாக 2 முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. யுஐடிஏஐ-வின் கூற்றுப்படி, இந்த மாற்றமானது உலகின் மிகப்பெரிய அடையாள தளமான ஆதாரை ஃபியூச்சர்-ப்ரூஃப் (Future-proof) ஆக மாற்ற வேண்டும் மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தின் முன்னணியில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
முதலாவதாக - ஆதார் 2.0 ஆனது செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence) துல்லியம் மற்றும் மீள்தன்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். நிகழ்நேர மோசடி கண்டறிதல் (Real-time fraud detection) முதல் தகவமைப்பு சரிபார்ப்பு (Adaptive verification) வரை, ஏஐ ஆனது ஆதார் அட்டையை ஸ்மார்ட் ஆனதாக மாற்றும்.
இதோடு பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain technology) ஆனது ஸ்டோரேஜ் மற்றும் சரிபார்ப்பு அடுக்குகளை ஆதரிக்கும். இது அடையாள பதிவுகளை கிட்டத்தட்ட சேதப்படுத்த முடியாததாக மாற்றும். கடைசியாக குவாண்டம்-ரெசிஸ்டென்ட் என்க்ரிப்ஷன் (Quantum-resistant encryption) ஆனது ஆதார் அட்டைக்கான பாதுகாப்பின் இறுதி அடுக்கை சேர்க்கும். இது சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடுத்த சகாப்தத்திற்கான அமைப்பை தயார்படுத்தும்.
இரண்டாவதாக - ஆதார் 2.0 என்கிற தொலைநோக்கு பார்வையை உயிர்ப்பிக்க, யுஐடிஏஐ ஆனது தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இவர்களின் நோக்கம்: அடுத்த தசாப்தத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் அடையாளம் மற்றும் அங்கீகார கோரிக்கைகளை கையாளக்கூடிய நீண்டகால டிஜிட்டல் வரைபடத்தை வடிவமைப்பதே ஆகும்
எல்லாவற்றை விட முக்கியமாக இந்த திட்டம் ஆதாரை டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்துடன் (Digital Personal Data Protection Act) இணைக்கிறது. இதன் கீழ் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்பது வெறும் ஆட்-ஆன்களாக இல்லாமல் - அடிப்படை கொள்கைகளாக இருப்பதை உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








