சுந்தர் பிச்சை பெயரை சொல்லி ஸ்டார்ட் அப் தொழில் முனைவோரை நூதனமான முறையில் ஏமாற்றிய கும்பல்.!
தற்போது இந்தியாவில் ஸ்டார்ட் அப் என்ற வார்த்தை தான் இளைஞர்கள்-இளம் பெண்கள் மத்தியில் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பல்வேறு இளைஞர்கள் சின்ன சின்ன ஐடியாவை, சிறப்பாக முயற்சி செய்து தங்களது தொழில் வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.
இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், ஓலா, ஓயோ, ஸ்விகி, என இப்படி நம் கண்முன் தென்படும் பல நிறுவனங்களும், இளைஞர்களின் சிறு முயற்சியினால், சின்னதாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான். ஆனால் இப்போது இவைதான் இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான முன்னணி நிறுவனங்கள்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளைப் பெற்று தரும் உலகின் பிரமாண்ட முதலீட்டுத் திருவிழா நடத்துவதாக அறிவித்து, நூதனமான முறையில் நடந்த ஊழல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது புதுடில்லியைச் சேர்ந்த முதலீட்டாளர்களாக அறியப்படும் லூக் தல்வார் மற்றும் அர்ஜுன் சவுத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து சர்வதேச ஸ்டார்ட் அப் மாநாடு என்ற நிகழ்ச்சியை நொய்டாவில் கடந்த ஜனவரி 14-16 வரை நடத்துவதாக அறிவித்தனர். பின்பு இந்த நிகழ்வு மார்ச் 24-26க்கு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
குறிப்பாக உலகின் முதலீட்டு திருவிழாவாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோருடன் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களான சிகோயா மற்றும் டைகர் குளோபல் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டன. மேலும் இது தொடர்பான விளம்பரங்களில் ஒரு மத்திய அமைச்சரின் புகைப்படங்களும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தான் இந்த நிகழ்ச்சிக்கு நம்பகத்தன்மை உருவானது. குறிப்பாக இந்த நிகழ்வில் பங்கேற்க தலைக்கு 8000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்பு இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்க 2000-க்கும் மேம்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 24-26 வரை நொய்டாவில் நடந்துள்ளது.
ஆனால் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்ட ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதைத்தொடர்ந்து தங்களை ஏமாற்றி மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதை உணர்ந்த இளம் தொழில்முனைவோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நூதன ஊழல் குறித்து தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் தற்போது இந்தியா முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யப் பல நாட்டு முதலீட்டாளர்களும் தயாராகத் தான் உள்ளனர். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் நூதனமான ஊழல் நடந்த சம்பவம் நாட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Image credit: @santhoshd/Twitter, moneycontrol.com
news Source: moneycontrol.com


Click it and Unblock the Notifications