NO UPI ONLY CASH-உ போர்டு வச்சி ஒரு புண்ணியம் இல்ல.. வணிகர்களுக்கு வரித்துறை அதிகாரிகள் கொடுத்த ஷாக்!
நோ யுபிஐ.. ஒன்லி கேஷ் (NO UPI.. ONLY CASH) என்று பதாகைகள் வைப்பதன் மூலம்.. அதாவது யுபிஐ வழியாக பணம் வாங்காமல் ரொக்கமாக மட்டுமே பணத்தை வாங்குவதன் மூலம் - கர்நாடகாவை சேர்ந்த வர்த்தகர்களால் ஜிஎஸ்டி-யில் இருந்து தப்பிக்க முடியாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
விரிவான அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கர்நாடகாவின் வணிக வரித்துறை (Karnataka Commercial Taxes Department) ஆனது மாநிலம் முழுவதும் உள்ள சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டி கோரிக்கை அறிவிப்புகளை வழங்கியதன் விளைவாக, சிறு வணிகர்கள் "ரொக்கமாக மட்டுமே வாங்கப்படும்" என்கிற செயல்முறைக்கு மாறியுள்ளனர்.

ஆனால் இந்த செயல்முறை வேலைக்கு ஆகாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதாவது பணம் செலுத்தும் முறை ஒரு பொருட்டல்ல - உங்கள் மொத்த வருவாய்தான் முக்கியம் என்று கூறியுள்ளனர். இன்னும் விளக்கமாக கூற வேண்டும் என்றால் முழு டேக்ஸபிள் டர்ன்ஓவருக்கும் (Full taxable turnover) ஜிஎஸ்டி பொருந்தும் என்று கர்நாடகாவின் வணிக வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பணத்தை ரொக்கமாக வாங்குவதன் மூலம் ஜிஎஸ்டி தொடர்பான கண்காணிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நம்புவர்களுக்கு கர்நாடகாவின் வணிக வரித்துறை ஆனது நேரடியாக பதில் அளித்துள்ளது. இந்த சமீபத்திய நடவடிக்கை - 2021 - 2022 நிதியாண்டுக்கும் 2024- 2025 நிதியாண்டுக்கும் இடையில் யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் கட்டண தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ரசீதுகள் மட்டும் ரூ.20 லட்சத்தை (சேவைகளுக்கு) அல்லது ரூ.40 லட்சத்தை (பொருட்களுக்கு) தாண்டிய வர்த்தகர்களுக்கு பதிவு மற்றும் இணக்கம் தேவைப்படும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து எதிர்பாராத விதமாக, பெங்களூரு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல விற்பனையாளர்கள் (தேநீர் கடைகள், பேக்கரிகள் மற்றும் சந்தை கடைகள் உட்பட) பலரும் லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான வரி பொறுப்புகள் எழும் என்று அஞ்சி யுபிஐ பேமண்ட்களை முழுவதுமாக மறுக்க தொடங்கினர்; நோ யுபிஐ (NO UPI) என்று எழுதப்பட்ட பலகைகளை வைத்துள்ளனர்.
ஆனால் வரி அதிகாரிகள் நோ யுபிஐ என்கிற அணுகுமுறை குறைபாடுடையது மற்றும் பயனற்றது என்று எச்சரித்துள்ளனர். ரொக்கமாக மட்டுமே பணத்தை வாங்குவது உங்களுக்கு விலக்கு அளிக்காது. ஜிஎஸ்டி தகுதியை கணக்கிடும்போது டிஜிட்டல் அல்லது ரொக்கமாக இருந்தாலும் - அனைத்து வருமானமும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் பழங்கள் அல்லது ரொட்டி போன்ற விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு வழிகாட்டவும், சட்டப்பூர்வமான வரி மட்டுமே கோரப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அறிவிப்புகளுக்கு பதிலளிக்க தவறினால் அபராதங்கள் அல்லது மீட்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படலாம்.
இதற்கிடையில் மணிகண்ட்ரோல் (moneycontrol.com) வலைத்தளதின் சமீபத்திய அறிக்கையானது, கர்நாடக வணிக வரித் துறையை தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களும் கூட இதே செயல்முறையை கொண்டுவரலாம் என்றும், இதற்காக பேமண்ட் அக்ரிகேட்டர்களிடமிருந்து வணிகர்களின் வருடாந்திர வருவாய் தரவை கேட்டுள்ளதாகவும் கூறுகிறது.
ஆனால் இந்த அறிக்கை - ஆண்டுதோறும் ரூ.40 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் வணிகர்களுக்கு பிற மாநில வரித்துறைகள் எப்போது அறிவிப்புகளை அனுப்ப தொடங்கும் என்பதை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் அரசாங்க விதிமுறைகளின்படி, ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டும் அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டி-க்கு பதிவு செய்யவது கட்டாயம் என்கிறது.
இதன்மூலம் கர்நாடகாவில் நடப்பதை போலவே, நாட்டின் பிற பகுதிகளிலும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருமே ரொக்கத்தை நோக்கி நகர்வதை இன்னும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேற்குறிப்பிட்டபடி இது எந்த வரிவிலக்கையும் கொடுக்காது!


Click it and Unblock the Notifications








