ரூ.100 ரூபாயோ, ரூ.10,000 ரூபாயோ.. UPI வழியாக பணம் அனுப்ப கட்டணமா? நிதி அமைச்சகம் விளக்கம்!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் (UPI Apps) வழியாக பணம் அனுப்ப விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று.. ஆர்பிஐ (RBI) ஆளுநர் ஆன சஞ்சய் மல்ஹோத்ரா கிளப்பி விட்ட சந்தேகம் இன்னும் அடங்கவில்லை.
இதற்கு ஒரு முடிவு காட்டும் வகையில், யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) வழியிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று நிதி அமைச்சகம் நேற்று (ஆக.18) மக்களவையில் தெரிவித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கருத்துக்கள் - யுபிஐ சேவையானது தொடர்ந்து இலவசமாக கிடைக்காமல் போகலாம் என்கிற கவலைகளை தூண்டிய சில நாட்களுக்கு பிறகு நிதி அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்து, யுபிஐ பயனர்களின் மத்தியில் நிலவிய சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்ககும்படி முன்மொழிந்ததா என்று கேட்கப்பட்ட எழுத்துப்பூர்வ கேள்விக்கு, "தற்போது, யுபிஐ மீது பரிவர்த்தனை கட்டணங்களை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை" என்று நிதித்துறை இணையமைச்சர் ஆன பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.
நினைவூட்டும் வண்ணம் கடந்த ஜூலை 25 அன்று மும்பையில் நடந்த ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் பிஎப்எஸ்ஐ உச்சி மாநாட்டில் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இலவசமாக கிடைக்கும் யுபிஐ சேவை "நல்ல பலன்களைத் தந்தது" என்று கூறியிருந்தார். இருப்பினும், எந்தவொரு சேவையும் நிலையானதாக இருக்க, அதன் செலவுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
"முக்கியமான விஷயம் என்னவென்றால், யுபிஐ அல்லது வேறு எந்த கட்டண முறையும் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும்... மேலும் யாராவது செலவுகளை செலுத்தினால் மட்டுமே அது நிலையானதாக இருக்கும். எனவே அது அரசாங்கமாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கும் வரை - அது அவ்வளவு முக்கியமல்ல - முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு சேவையின் செலவுகளையும் கூட்டாகவோ அல்லது பயனரால் செலுத்தப்பட வேண்டும்." என்று கூறியிருந்தார்.
ஆர்பிஐ ஆளுநரின் இந்த கருத்து "இலவச யுபிஐ" முடிவுக்கு வருகிறதா என்கிற சந்தேகத்தை கிளப்பியது. பின்னர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணவியல் கொள்கைக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில், ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தனது கருத்துக்களை தெளிவுபடுத்தினார், யுபிஐ சேவை ஆனது என்றென்றும் இலவசமாக இருக்க முடியாது என்று தான் கூறவில்லை என்று வலியுறுத்தினார்.
"அது என்றென்றும் இலவசமாக இருக்க முடியாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. இப்போதும் அது இலவசம் இல்லை என்பதுதான் என் கருத்து. யாரோ அதற்கு பணம் செலுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கு மானியம் வழங்குகிறது. ஆனால் எங்கோ செலவுகள் செலுத்தப்படுகின்றன. அது வேறு கேள்வி. ஆனால் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை" என்று மல்ஹோத்ரா விளக்கம் அளித்திருந்தார்.
நேற்றோ இன்றோ அல்ல.. யுபிஏ பேமண்ட்களுக்கு வணிக தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படலாம் என்கிற ஊகம் பல காலமாகவே நிலவுகிறது. வழக்கமாக 1-3 சதவீதம் வரம்பில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமண்ட்களை செயல்படுத்தும் வங்கிகளால், வணிகர்களுக்கு எம்டிஆர் விதிக்கப்படுகிறது. ஜனவரி 2020 முதல், நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளில் எம்டிஆர் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








