புது ரூல்ஸ்.. SIM-க்கு 90 நாட்கள்.. புதுசு கிடையாது.. 11 வருட பழசு.. முடிச்சு விட்ட டிராய்.. டெலிகாமில் உஷார்!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எஸ் ஆகிய நிறுவனங்களின் சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்கள் வெறும் ரூ.20 ரீசார்ஜ் செய்தால் போதும் 90 நாட்களுக்கு சேவைகளை பெற்றுகொள்ளலாம் என்று புது விதிகள் வந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த செய்திகளுக்கு டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது விளக்கம் அளித்துள்ளது. இது உண்மையா? பொய்யா?
தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது விதிகளை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டெலிகாம் விதிகளில் அதற்கு இடமில்லை. இருப்பினும், கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு திட்டங்கள் கிடைப்பதற்கு ஏதுவாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்களை கொடுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

இதன்படி ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கிய திட்டங்களை களமிறக்க தொடங்கின. சொல்லப்போனால், இந்த திட்டங்கள் அடிமட்ட விலையில் இல்லை. வேலிடிட்டிக்கு ஏற்ப ஆரம்பமே அதிக விலையில்தான் தொடங்குகின்றன. இந்த நேரத்தில் ரூ.20 ரீசார்ஜ் செய்தால் போதும் 90 நாட்களுக்கு சேவைகளை பெற்று கொள்ளலாம் என்று செய்திகள் வரத்தொடங்கின. இது டிராயின் புது விதிகள் என்றும் குறிப்பிடப்பட்டன.
இதை, நம்பிய டெலிகாம் கஸ்டமர்கள் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால், உண்மை அதுவல்ல. இப்படி வெளியான செய்திகளுக்கு டிராய் நேரடியாக விளக்கம் அளித்துள்ளது. அதாவது, புதிதாத எந்த விதிகளும் கொண்டுவரப்படவில்லை. 11 வருடங்களுக்கு முன்பு வந்த விதிகளை இப்போது செய்திகளாக்கி வருகின்றனர் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, இது புதிய விதிகள் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டது.
இருப்பினும், அந்த 11 வருட பழைய விதிகள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த விதிகளானது டெலிகாம் கஸ்டமர்களுக்கு ஆட்டோமெட்டிக் நம்பர் ரிடென்சன் திட்டத்தை (Automatic Number Retention Scheme) உறுதி செய்திறது. அதாவது, 90 நாட்கள் நீங்கள் உங்களது சிம் கார்டில் எந்தவொரு அவுட்கோயிங் கால், எஸ்எம்எஸ் மற்றும் இன்டர்நெட் போன்ற சேவைகளை பயன்படுத்தவில்லை என்றால் உங்களது நம்பர் டீ-ஆக்டிவேட் செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது.

அதே நேரத்தில் உங்களிடம் ரூ.20 டாக்டைம் பேலன்ஸ் இருக்கும்பட்சத்தில் அந்த பணம் கழித்துகொள்ளப்பட்டு, அதற்கு பதிலாக கூடுதலாக 30 நாட்கள் உங்களுக்கு நம்பருக்கு ரிடென்சன் கிடைக்கும். அதாவது டீ-ஆக்டிவேட் செய்யப்படுவதை தடுத்து உங்களது நம்பர் வேறொருவருக்கு செல்லாமல் இருப்பதை 30 நாட்களுக்கு உறுதி செய்யும். இப்படி ரூ.20 மூலம் 30 நாட்களுக்கு டீ-ஆக்டிவேட் செய்யப்படுவதை தடுக்கலாம். இல்லையென்றால், 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு சிம் கார்டு டீ-ஆக்டிவேட் செய்யப்படும்.
இதற்கு பிறகு நம்பருக்கு ரிடென்சன் கிடைக்காது, அதாவது உங்களது நம்பர் வேறொவருக்கு புதிய சிம் கார்டு நம்பராக வழங்கப்படலாம். இதையே இந்த ஆட்டோமெட்டிக் நம்பர் ரிடென்சன் திட்டம் சொல்கிறது. ஆகவே, ரூ.20 ரீசார்ஜ் செய்தால், 90 நாட்கள் சேவைகள் கிடைக்கிறது என்று சொல்லப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவையாகும். அதேபோல, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சேவைகள் கிடைக்கும் என்பதும் பொய்யான செய்திகளாகும். இதன் மூலம் இது உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications








