இனி அசல் ரேஷன் கார்டு தேவையில்லை! எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. முக்கிய அறிவிப்பு வெளியானது..
இந்தியாவில் ஆதார் கார்டு போன்று ரேஷன் கார்டும் மிகவும் முக்கியமான ஆவணமாகும். குறிப்பாக ரேஷன் கார்டு (ration card) ஆனது பல்வேறு ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதோடு மட்டுமின்றி அரசு நலத்திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு அத்தியாவசியமாக உள்ளது.
அசல் குடும்ப அட்டை கட்டாயமில்லை
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருட்களைப் பெறுவதற்காக இனி பொதுமக்கள் அசல் குடும்ப அட்டையை (ரேஷன் கார்டு) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என உணவுத் துறை அமைச்சர் திரு. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். குடும்ப அட்டையின் நகல் அல்லது அதன் எண் இருந்தாலே பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

அதாவது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களையும் விளக்கங்களையும் அளித்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஏடிஎம் இயந்திரங்களில் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல் மூலம் பணம் எடுப்பதைப் போல, இனி ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டை எண்ணைத் தெரிவித்தாலே பொருட்களைப் பெற முடியும். இதற்காக அங்குள்ள பயோமெட்ரிக் அல்லது லைவ் ஸ்கேன் முறையின் மூலம் பயனாளியின் அடையாளம் சரிபார்க்கப்படும். அதன்பின்பு அடையாளச் சரிபார்ப்பு முடிந்ததும், பயனாளிக்குத் தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இனிமேல் பொதுமக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட ரேஷன் கடைக்குச் செல்வது கட்டாயமில்லை. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப அருகில் உள்ள பிற ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பணி நிமித்தமாகவோ அல்லது பிற தேவைகளுக்காகவோ வெளியூர் செல்லும் பொதுமக்களும், அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையின் விவரங்களை ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதைப் போலவே, இனி ரேஷன் கார்டின் மென்பிரதி (Soft Copy) அல்லது ரேஷன் கார்டின் எண்ணை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருந்தாலே போதுமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரேஷன் கார்டை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.
ரேஷன் கார்டு கையில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பொதுமக்கள் பொருட்களை வாங்காமல் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஸ்மார்ட்போனில் உள்ள ரேஷன் கார்டு விவரங்கள் அல்லது கார்டின் எண்ணை பயன்படுத்தி, தேவையான சரிபார்ப்புக்குப் பிறகு ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது மொத்தம் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,795 ரேஷன் கடைகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 1,777 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அதுவும் இந்த புதிய நடைமுறை மற்றும் இந்த முக்கிய தகவல் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications