இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டாம்.. வருகிறது டிஜிட்டல் கட்டண முறை.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கவும் அரசு தரப்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் ஒரு முக்கிய வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது நாடு முழுவதும் 2027-ம் ஆண்டு மார்ச்க்குள் முற்றிலும் டிஜிட்டல் முறையிலான சுங்கக்கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விழா ஒன்றில் அவர் பேசியது என்னவென்றால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கக்கட்டணத்தை வசூலிக்கும் முறையை நோக்கி அரசு நிர்வாகம் நகர்ந்து வருகிறது. அதுவும் பாஸ்டேக்கை (FASTag) வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய முறை சுங்கக்கட்டண வசூலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தரும்.
அதுவும் வாகனப் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் ஆகிய இரண்டையும் பயன்படுத்தும் வகையிலான சுங்கக்கட்டண முறையால் ஆண்டுதோறும் அரசுக்கு ரூ.10000 கோடி வருவாய் கிடைக்கும். ஒரு காலத்தில் 12 நிமிடங்கள் வரையிலும், சில நேரங்களில் 30 நிமிடங்கள் வரையிலும் சுங்கச் சாவடிகளில் (Toll Plazas) காத்திருந்த நேரம், பாஸ்டேக் முறையால் குறைந்துள்ளது.
இன்னும் அதிக நேரத்தை சேமிக்கும் வகையில் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையை அரசு நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்த தடையற்ற டிஜிட்டல் சுங்கக்கட்டண வசூல் முறையின் நோக்கமே, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியத்தை முற்றிலும் குறைப்பது ஆகும். இதன் மூலம் பயண நேரம் மட்டுமின்றி எரிபொருள் பயன்பாடும் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் பயன் கிடைக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் சுங்கக் கட்டண வசூல் தொடர்பான பணிகளில் 60 முதல் 70 சதவீதம் வரை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் வாகனங்கள் தடையின்றி சுங்கக் கட்டணம் செலுத்தும் வகையிலான புதிய முறை முழுமையாக அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராஜ்மார்க் யாத்ரா
மேலும் சமீபத்தில் வெளியான அறிவிப்பில், சுங்கச் சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) மொபைல் செயலி மூலம் உள்ளூர் பாஸை இனி எளிதாக எண்ம (டிஜிட்டல்) முறையில் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

முன்பு சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 20 கி.மீ. எல்லைக்குள் வசிக்கும் வாகன ஓட்டிகள், உள்ளூர் பாஸ் பெற நேரடியாக சுங்கச்சாவடிக்குச் சென்று தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் நடைமுறையால், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி வழியாக சில நிமிடங்களிலேயே உள்ளூர் பாஸை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுகுறித்து என்ஹெச்ஏஐ (NHAI) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிக்கு நேரில் செல்லாமலே, உள்ளூர் பாஸைப் பெற்றுக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, தில்லியில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
