UPI சேவையில் புதிய வசதி.. இனி பின் நம்பர் இல்லாமலே பணம் அனுப்பலாம்.. ரூ.5000 லிமிட்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதாவது பணம் அனுப்புவதற்கும் டெபாசிட் செய்வதற்கும் வங்கிகளுக்குச் சென்று கால்கடுக்க நின்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தற்போது நிலைமை மாறிவிட்டது.
தற்போது வங்கி பக்கமே போகாமல் பணப் பரிவர்த்தனையை செல்போன் மூலம் மிகச் சுலபமாகச் செய்து முடித்துவிடலாம். அதுவும் ஆன்லைன் ஷாப்பிங் முதல் தெரிந்தவர்களுக்குப் பணம் அனுப்புவது வரை சில நொடிகளில் செய்ய முடியும். அதிலும் யுபிஐ (UPI) வந்த பிறகு பெட்டிகடை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்திலும் வேகமாவும் எளிதாகவும் பேமென்ட் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைத் தான் மக்கள் அதிக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலிகளில் அவ்வப்போது புதிய வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. எனவே தான் அதிக மக்கள் இந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பின் நம்பர் இல்லாமலே பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவந்துள்ளது போன்பே (PhonePe). இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
போன்பே செயலியில் பின் நம்பர் பதிவு செய்யாமல் பயோமெட்ரிக் முறையில் பணம் அனுப்ப முடியும். பயோமெட்ரிக் அல்லது முக அடையாள அங்கீகாரம் வாயிலாக பணம் அனுப்பும் வசதி தான் போன்பே செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ரூ.5000 வரை உள்ள தொகைக்கு தான் இந்த வசதியை பயன்படுத்த முடியும். ரூ.5000-க்கு மேற்பட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்றால் யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்று போன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து இடங்களிலும் வாடிக்கையாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் பணம் அனுப்புவதை உறுதி செய்ய இந்த புதிய அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளதாக போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் பயனரின் போனில் உள்ள ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்பு மூலம் பரிவர்த்தனையைச் சரிபார்க்கிறது. அதேபோல் இந்த புதிய வசதியை போன்பே ஆப் Profile பகுதியில் உள்ள 'Manage Payments' மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
வெளிச்சம் குறைவு அல்லது சென்சார் கோளாறு காரணமாக பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக பின் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். குறிப்பாக தற்போது கொண்டுவரப்பட்ட இந்த புதிய வசதி ரூ.5000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய வசதி ஐபோன் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் இதுகுறித்து PhonePe-இன் தலைவர் தீப் அகர்வால் கூறியது என்னவென்றால், இந்த புதிய வசதி பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளையும் பராமரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் போன்பே-வில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பு பொதுவாக ரூ.1,00,000 ஆகும். அதாவது நீங்கள் ஒரு நாளில் மொத்தம் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தலாம். குறிப்பாக இந்த வரம்பு NPCI விதிகளின்படி உள்ளது. ஆனாலும் சில வங்கிகள் தங்கள் கணக்குகளுக்கு குறைந்த வரம்பையும் நிர்ணயிக்கலாம். கூடுதலாக நீங்கள் வழக்கமாக ஒரு நாளில் 10-20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.
மேலும் ஒவ்வொரு பயனருக்கும் சரியான வரம்பு அவர்களின் வங்கி மற்றும் கணக்கு வகையைப் பொறுத்து மாறுபடலாம். எனவே போன்பே செயலி அல்லது வங்கி செயலியில் யுபிஐ வரம்பு பிரிவைப் பார்த்தால் உங்களுக்கு முழுமையான தெளிவு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications