ஜூலை 1 முதல் ஆதாரில் இந்த சேவை இலவசம்.. 6 மாதம் மட்டும் அவகாசம்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
இந்தியா முழுவதும் அனைத்து முக்கிய சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதுவும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்புக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இலவசமாக மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கும் சேவை அடுத்த 6 மாதங்கள் வரை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, வீட்டிலிருந்தபடியே தங்களது மொபைல் போன் மூலம் மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க இனி கூடுதல் செலவு செய்ய வேண்டியதில்லை. இதுவரை மின்னஞ்சல் முகவரியை சேர்க்கவோ அல்லது மாற்றவோ 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) புதிய அறிவிப்பின்படி இந்த சேவை ஜூலை 1 முதல் அடுத்த ஆறு மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வரை ஆதார் அட்டைதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் தங்களது மின்னஞ்சல் முகவரியை எளிதாக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக இந்தச் சலுகையின் முக்கியமான பலன் என்னவென்றால், ஆதார் சேவை மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் இந்த சேவையை வீட்டிலிருந்தபடியே எளிதாகப் பெற முடியும். செயலியைத் திறந்து, தேவையான வழிமுறைகளைப் பின்பற்றி புதிய மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்தால் போதும். இதன் மூலம் பயனர்கள் பணத்தைச் சேமிப்பதுடன், நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்பு சேவையை இலவசமாக வழங்குவதன் மூலம், அரசு மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நாட்டின் டிஜிட்டல் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான அரசு மற்றும் நிதி சேவைகள் ஆன்லைன் வாயிலாக கிடைப்பதால், ஒவ்வொரு குடிமகனின் ஆதார் உடன் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட வேண்டும் என UIDAI விரும்புகிறது.
அதேபோல் ஆதாருடன் மின்னஞ்சல் முகவரியை இணைப்பது, OTP அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் ஆன்லைன் KYC செயல்முறைகளை பாதுகாப்பானதாகவும், விரைவானதாகவும், எளிமையானதாகவும் மாற்றுகிறது. இதன் மூலம் பயனர்கள் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை சிரமமின்றி பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
அதுவும் ஆதாருடன் மொபைல் எண்ணை மட்டும் இணைத்தால் போதுமானது என்று நினைக்க வேண்டாம். மின்னஞ்சல் முகவரியையும் இணைப்பதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். உங்கள் மொபைல் எண் தொலைந்துவிட்டாலோ அல்லது செயல்படாத நிலையிலோ, மின்னஞ்சல் முகவரி மாற்று தொடர்பு வழியாக உதவும்.

இதுதவிர உங்கள் ஆதார் எப்போது பயன்படுத்தப்பட்டது, அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டதா போன்ற முக்கிய தகவல்கள் நேரடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். இதனால் உங்கள் ஆதார் விவரங்களை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
மின்னஞ்சல் முகவரியை ஆதாருடன் இணைப்பதன் மூலம் டிஜிலாக்கர் மற்றும் பல அரசு இணையதளங்களில் எளிதாக உள்நுழைந்து ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த இலவச சேவை டிசம்பர் மாதம் வரை மட்டுமே வழங்கப்படுவதால், மின்னஞ்சல் முகவரியை இன்னும் இணைக்காதவர்கள் அல்லது பழைய மின்னஞ்சலை மாற்ற விரும்புபவர்கள் ஜூலை 1 முதல் எந்தக் கட்டணமும் இல்லாமல் புதுப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு மீண்டும் 75 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications