ஏப்.10 முதல் புது ரூல்ஸ்.. TOLL GATE-ல் கார், ஜீப், வேன்களுக்கு புது சிக்கல்.. இதை வச்சிக்கிட்டு போயிடாதீங்க!
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) ஆனது, சுங்கச் சாவடிகளில் (அதாவது டோல் கேட்களில்), வருகிற 2026 ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளை அறிவித்து உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் (National highway) மற்றும் விரைவுச்சாலைகளில் (Expressways) நீண்ட வரிசைகளை குறைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் கீழ், சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பணப்பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது ரூ.100, ரூ.200 ரொக்க பணமாக கொடுத்து இனி டோல் கேட்களை (Toll Gate) கடக்க முடியாது.

இந்த அறிவிப்பின்படி, சுங்கக் கட்டணம் வசூலிக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசலைக் குறைத்து, தகராறுகளையும் தணிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்படி, அனைத்து சுங்கக் கட்டணங்களும் மின்னணு முறையில் செலுத்தப்பட வேண்டும்.
செல்லுபடியாகும் ஃபாஸ்டேக் (FASTag) இல்லாத வாகனங்கள் கூட டோல் கேட்களின் வழியாக செல்ல அனுமதிக்கப்படும், ஆனால் அவை வழக்கமான சுங்கக் கட்டணத்தை விட 1.25 மடங்கு தொகையை யுபிஐ (UPI) மூலம் செலுத்த வேண்டும். ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளர் யுபிஐ மூலம் பணம் செலுத்த தவறினால், தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின் 14-வது விதியின் கீழ் - இந்த வழக்கு கையாளப்படும்.
இந்த விதி, வாகனத்தை நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்காமல் தடுக்கவோ அல்லது அங்கிருந்து அகற்றவோ அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், செலுத்தப்படாத சுங்கக் கட்டணங்களுக்கு மின்னணு அறிவிப்பு (e-notice) அனுப்பப்படலாம். மூன்று நாட்களுக்குள் நிலுவை தொகையை செலுத்த தவறினால், இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
ஃபாஸ்டேக் மற்றும் ஆண்டு பாஸ்களுக்கான வலியுறுத்தல் அரசு துறைகள் மற்றும் தகுதியுள்ள நிறுவனங்கள் "விலக்கு அளிக்கப்பட்ட ஃபாஸ்டேக்குகளை" பெறுமாறு அல்லது ஃபாஸ்டேக் அடிப்படையிலான ஆண்டு பாஸ்களை தேர்வு செய்யுமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தனியார் கார்களுக்கான ஆண்டு பாஸின் (புதிய மற்றும் உயர்த்தப்பட்ட) விலை ரூ.3,075 ஆகும், இது 200 சுங்கச்சாவடிகளை கடக்க அனுமதிக்கிறது. சுங்கச்சாவடி விலக்குகள் - தனிநபர்களுக்கானது அல்ல, மாறாக குறிப்பிட்ட அலுவலகங்கள் அல்லது அதிகார அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டைகளை தவறாக பயன்படுத்துவது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது, இது பெரும்பாலும் தகராறுகளுக்கும் தாமதங்களுக்கும் வழிவகுக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் என்எச்ஏஐ (NHAI) என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India) ஆனது வரவிருக்கும் 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டாக் ஓராண்டு பாஸ் கட்டணத்தை சமீபத்தில் அதிகரித்து இருந்தது. இந்த உத்தரவின்படி, வணிக நோக்கமற்ற வாகன பயனர்கள் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு பாஸுக்கு ரூ. 3000 க்கு பதிலாக ரூ. 3075 செலுத்த வேண்டும்.
நினைவூட்டும் வண்ணனும் அதிகப்படியான சுங்க கட்டணங்களிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களுடைய பயணத்தை எளிதாக்கவும், ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் கீழ், வணிக நோக்கத்திற்காக பதிவுசெய்யப்பட்ட வாகனம் (கார், ஜீப் மற்றும் வேன்) வைத்திருப்பவர் மற்றும் செயல்பாட்டு ஃபாஸ்டாக் வைத்திருக்கும் ஒருவர் இந்த ஒராண்டு பாஸுக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


Click it and Unblock the Notifications








