அம்பானி ஆடும் சதுரங்க ஆட்டம்! Jio-வின் கடைசி 1GB பிளான் நீக்கம்.. புது ரூ.199 பிளான் அறிமுகமான உடனே நடவடிக்கை!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், ரூ.199 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வேகத்தில், தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கி வந்த திட்டம் ஒன்றை அமைதியான முறையில் நீக்கியுள்ளது. அது என்ன திட்டம்? புதிதாக வந்துள்ள ரூ.199-ன் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:
நீக்கப்பட்ட திட்டம் எது? ஜியோ நிறுவனம் தனது ஆப்-ஒன்லி ரீசார்ஜ் ஆன ரூ.209 ப்ரீபெய்ட் பிளானை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஜியோ நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், மைஜியோ (MyJio) ஆப்பின் 'மலிவு விலை பேக்குகள்' (Affordable Packs) பிரிவில் உள்ள 'மதிப்பு திட்டங்கள்' (Value Plans) என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்த ரூ.209 திட்டமானது, இப்போது காணப்படவில்லை.

ஜியோ பயனர்கள் இப்போது எதை இழக்கிறார்கள்? தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோவின் ஒரே ப்ரீபெய்ட் திட்டமான ரூ.209 பேக்கை பயனர்கள் இப்போது இழக்க நேரிடும். இந்த கட்டுரை எழுதப்படும் வரை, இந்த திட்டம் மைஜியோ ஆப்பில் காணப்படவில்லை. மேலும் ஜியோ நிறுவனம் இந்த பிளானை மீண்டும் கொண்டு வருமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 22 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கியது. அதாவது இது மொத்தமாக 22ஜிபி டேட்டாவை வழங்கியது.
இந்த பேக்கில், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தொகுக்கப்பட்ட ஓடிடி நன்மைகளின் ஒரு பகுதியாக ஜியோ டிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஸ்டோரேஜ் அணுகல் ஆகியவைகளும் கிடைக்கும். தினசரி அதிவேக டேட்டா தீர்ந்தவுடன், அன்றைய மீதமுள்ள நேரத்திற்கு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைந்தது. ரூ.209 திட்டத்தின் ஒரு நாளைக்கான செலவு ரூ.9.5 ஆகும்.
வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்ட சில கட்டண நடைமுறைகளை நிறுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ரிலையன்ஸ் ஜியோவுக்கு உத்தரவிட்டதாக வந்த செய்திகளை தொடர்ந்து இது நடந்திருக்கலாம் என்று டெலிகாம்டால்க் வலைத்தளத்தின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் ரூ.199 க்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில் ரூ.209 நீக்கப்பட்டு இருப்பது - இன்னொரு வகையான சந்தேகத்தை கிளப்புகிறது. ரூ.209-ஐ போலவே ரூ.199-க்கு மிகவும் மலிவான விலைக்கு புதிய பிளானை அறிமுகம் செய்துவிட்டு, ரூ.199-ல் இன்னும் குறைவான வேலிடிட்டியை கொடுத்துவிட்டு, ஜியோ நிறுவனம் ரூ.209-ஐ நீக்கிவிட்டது போல் தெரிகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.199 திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி வெறும் 18 நாட்கள் மட்டுமே ஆகும். நன்மைகளை பொறுத்தவரை ரூ.199 திட்டத்தின் கீழ் டெய்லி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில் உள்ள ஒரு குறை என்னவென்றால், ரூ.199-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 5ஜி டேட்டா கிடைக்காது.
ஆகையால் நீங்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் நன்றாக கிடைக்கும் பகுதியில் இருந்தாலும் கூட, ரூ.199-ஐ ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ஜியோ 5ஜி சேவைகள் அணுக கிடைக்காது. இந்த நிலை ஜியோ நிறுவனத்தில் மட்டுமல்ல.; ஏர்டெல் நிறுவனத்திலும் கூட இதே நிலைதான் (2ஜிபி மற்றும் அதற்கு மேலான திட்டங்களில் மட்டுமே 5ஜி) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.199 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது. கூடுதலாக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாக்களும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications