2025 வரை Installation கட்டணம் கிடையாது.. BSNL-ன் பலே அறிவிப்பு
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது ஒரு காலத்தில் ஃபிக்ஸடு-பிராட்பேண்ட் சேவையின் (Fixed-broadband service) ராஜாவாக இருந்தது. ஆனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சியானது பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது.
மேற்கண்ட 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே வேகமான நெட்வொர்க் டெப்லாய்மென்ட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு நன்மைகளுடன் கூடிய கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்கி.. பெரும்பாலான பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டன. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனம் அதன் சந்தை பங்கை கடுமையாக இழந்துள்ளது.

ஆனாலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் சோர்ந்துவிடவில்லை. புதிய சந்தாதாரர்களை சேர்க்க மற்றும் பிராட்பேண்ட் பிரிவில் மீண்டும் முதல் இடத்தை அடைய கடுமையாக போராடி வருகிறது. அதனொரு பகுதியாக, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் ஒரு சிறப்பு தள்ளுபடி சலுகையை இன்னும் 1 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது.
தனது பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான நிறுவல் கட்டணத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தள்ளுபடி செய்வதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 31, 2024 இல் முடிவடைய வேண்டிய இந்த சலுகை இப்போது 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும்? பாரத் ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இணையும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 என்கிற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மேலும் காப்பர் கனெக்ஷனை பயன்படுத்துவதற்கான ரூ.250 என்கிற நிறுவல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இவ்விரு சலுகைகளுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து புதிய பிராட்பேண்ட் இணைப்பை தேடும் நபர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கூட தத்தம் பிராட்பேண்ட் இணைப்புகளை நிறுவுவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன. ஆனால் அதை பெற வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டத்தை (3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் அல்லது 1 ஆண்டு) தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களானது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களுடன் போட்டி போடும் அளவிலான விலை நிர்ணயங்களை பெற்றுள்ளன. மேலும் பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் ஓடிடி நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது சினிமாபிளஸ் (Cinemaplus) எனப்படும் தனது ஓடிடி சேவையின் மீது 50% தள்ளுபடியை அறிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. வழக்கமாக, இது மாதத்திற்கு ரூ.99 முதல் கிடைத்தது. ஆனால் இப்போது, வெறும் ரூ.49-க்கு சினிமாபிளஸ் ஸ்டார்டர் பேக்கை பெற முடிகிறது. இதன் கீழ் லயன்ஸ்கேட், ஷீமாரோ மீ, ஹங்காமா மற்றும் எபிக் ஆன் உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்.
அடுத்ததாக உள்ள சினிமாபிளஸ் ஃபுல் பேக்கின் கீழ் ஜீ5, சோனி லைவ், யப் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.199 ஆகும். சினிமாபிளஸ் பிரீமியம் பேக்கின் விலை மாதத்திற்கு ரூ.249 ஆகும். இதன்கீழ் ஜீ5, சோனி லைவ், யப் டிவி, லயன்ஸ் கேட், ஷீமாரோ மீ, ஹங்காமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கான அணுகல்கள் கிடைக்கும்.
மேற்கண்ட 3 சினிமாபிளஸ் திட்டங்களையுமே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான திட்டத்தை வாங்க வேண்டும். அவ்வளவுதான் இதற்கான சந்தா கட்டணம் உங்களுடைய பிராட்பேண்ட் பில்லில் சேர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








