அடுத்த 1 ஆண்டுக்கு இலவசம்.. ஆதார் சேவையில் இந்திய அரசின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆதார் அணுகலை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கான (Mandatory Biometric Updates) அனைத்து கட்டணங்களிலிருந்தும் ஒரு வருட விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் - ஒரு குழந்தைக்கு 7 அல்லது 15 வயது ஆகும் போது தேவைப்படும் கைரேகைகள், கருவிழி மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்காக, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் செலுத்த வேண்டிய ரூ.125 கட்டணத்தில் (விலை உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தில்) இருந்து விலக்கு கிடைக்கும்.

அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றம், நாடு முழுவதும் கிட்டத்தட்ட 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யுஐடிஏஐ அறிவித்துள்ள இந்த கட்டணத் தள்ளுபடி ஆனது செப்டம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும்.
"மக்கள் நலனுக்கான நடவடிக்கையாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கான (MBU-1) அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வயதினருக்கான எம்பியு கட்டணங்கள் தள்ளுபடி ஏற்கனவே அக்டோபர் 1, 2025 முதல் தொடங்கப்பட்டு ஒரு வருட காலத்திற்கு அமலில் இருக்கும்" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறியாதோர்களுக்கு - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் இல்லாமல் ஆதார் அட்டைகளை பெறலாம். அவர்கள் 5 வயதை எட்டியதும், அவர்களின் முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு ஆனது பதினைந்து வயதில் நடக்கும். குழந்தைகளின் கைரேகைகள் மற்றும் கருவிழி வடிவங்கள் முதிர்ச்சியடைவதால் இதை (இரண்டாவது முறை) செய்ய வேண்டும்.
முன்னதாக - முதல் மற்றும் இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் ஆனது 5 - 7 வயது மற்றும் 15 - 17 வயதுக்குள் பூர்த்தி செய்யப்பட்டால் அது இலவசம் என்று யுஐடிஏஐ தெரிவித்து இருந்தது. இப்போது 5 முதல் 17 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும், அடுத்த ஒரு வருட காலத்தில் எந்த கட்டணமும் செலுத்தாமல் தங்கள் ஆதாரை அப்டேட் செய்ய முடியும்.
இந்த நடவடிக்கை பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வு பதிவுகள், உதவித்தொகைகள் மற்றும் நேரடி மானிய பரிமாற்ற திட்டங்கள் போன்ற சேவைகளுக்கான அணுகலை எளிதாக்கும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக்ஸுடன் கூடிய ஆதார் ஆனது குழந்தைகள் இந்த சேவைகளை தடையின்றி பெற உதவும்
கட்டண விலக்கு தொடர்பான அறிவிப்புடன் சேர்த்து - ஆதார் அட்டை உடன் இணைக்கப்பட்ட சலுகைகள் மற்றும் சேவைகளின் தடையற்ற பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை முன்னுரிமையின் அடிப்படையில் புதுப்பிக்குமாறும் யுஐடிஏஐ அறிவுறுத்தி உள்ளது.
விலை உயர்த்தப்பட்ட ஆதார் அப்டேட் கட்டணங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி யுஐடிஏஐ ஆனது ஆதார் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடவே யுஐடிஏஐ ஆனது அடுத்த சுழற்சிக்கு, அதாவது அக்டோபர் 1, 2028 முதல் செப்டம்பர் 30, 2031 வரை பொருந்தக்கூடிய கட்டணங்களையும் வெளியிட்டுள்ளது.
இதன்கீழ் முன்னதாக ரூ.50 விலையுள்ளதாக இருந்த ஆதார் சேவைகள் தற்போது ரூ.75 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ரூ.100 விலையுள்ள ஆகார் சேவைகளுக்கு இனி ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும். பின்னர் அக்டோபர் 1, 2028 முதல் தொடங்கும் இரண்டாம் கட்டத்தில் - அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.75 என்கிற கட்டணம் வசூலிக்கபட உள்ள சேவைகளுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் ரூ.125 செலுத்திய பிறகு கிடைக்கும் சேவைகள் ரூ.150 ஆக விலை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








