அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை
அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

வரலாறு காணாத நஷ்டம்
வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியது.

நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம்
இதையடுத்து உச்சநீதிமன்றம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை முழுவதுமாக செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

நீதிபதிகள் கடும் கண்டனம்
ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொகையை முழுமையாக செலுத்தாத நிலையில், நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணைக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் உரிமைத் தொகையை முழுமையாக செலுத்த முடியாமல் கடன் சுமையில் தத்தளித்து வந்தது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும்
இதையடுத்து வோடாபோன் ஐடியா நிறுவனம் தொலை தொடர்புத் துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1 ஜிபி டேட்டாவிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ 35 ஆக இருக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணம் ரூ 50 ஆக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா
மேலும் டேட்டா கட்டண உயர்வை தவிர்க்கும்படி, அவுட்கோயிங் அழைப்புகளின் குறைந்தபட்ச விலையை நிமிடத்திற்கு 6 பைசா என நிர்ணயம் செய்ய விரும்புவதாகவும் அதில் கூறியது.

அரசு வேறு வழியின்றி நடவடிக்கை
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேறு வழியின்றி கொரோனாவை தடுப்பதற்கு மேற்கொண்ட காரியத்தால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு பெரும் பொருள் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம்
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சங்க நிர்வாகி தெரிவிக்கையில் இந்திய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் பாக்கி 1.6 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி வரை உள்ளது. எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணத்தில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது
அதேபோல் ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு கடன் தவணைகளை வசூலிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இதே பரிந்துரையை தாங்களும் பின்பற்ற உள்ளதாக கூறினார். எனவே, இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது எனவும் அதற்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்பவர்கள், மூன்று மாதங்களுக்கு பிறகும் கட்டண உயர்வின் பாதிப்பை சில நாட்களுக்கு தள்ளிப்போடலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications