இனி ஏடிஎம் கார்டு கூட தேவைப்படாது.. UPI மூலம் பணம் எடுக்க முடியும்.. வருகிறது புதிய வசதி.. இதோ முழு விவரம்!
இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இந்த யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும் முடியும், பணம் பெறவும் முடியும். இதுதவிர ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக் செய்வது, என அனைத்துமே இந்த யுபிஐ மூலம் எளிதாகிவிட்டது. ஆனால் சில முக்கிய தேவைகளுக்குப் பணம் தான் தேவைப்படுகிறது.
குறிப்பாக சில முக்கிய தேவைகளுக்குப் பணம் தேவைப்பட்டால் அதற்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்க வேண்டியுள்ளது. பின்பு வங்கி கிளைக்கு சென்று பணம் எடுக்கலாம். ஆனால் இதற்கு சற்று அதிக நேரம் தேவைப்படும். அதேபோல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவைப்படும். ஆனால் இனி எந்தவொரு சிரமம் இன்றி பணம் எடுக்க நீங்கள் யுபிஐ வசதியைப் பயன்படுத்தலாம்.

அதாவது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் எடுக்கும் வசதியைத் தொடங்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இதற்கு வேண்டி மளிகைக் கடைகள் அல்லது சிறிய சேவை மையங்கள் போன்ற லட்சக்கணக்கான வணிக நிருபர்களிடம் (BC) QR குறியீடுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆகவே மக்கள் தங்கள் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற எந்தவொரு UPI செயலியைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணத்தை எடுக்க முடியும்.
தற்போது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்தப் புதிய வசதியைக் கொண்டுவர ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் கோரியுள்ளது. குறிப்பாக வணிக நிருபர்களிடம் யுபிஐ வசதி மூலம் பணம் எடுப்பதைச் செயல்படுத்த இந்த ஒப்புதலைக் கோரியுள்ளது. ஆனால் இந்த திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் போன் மூலம் பணம் எடுப்பதை எளிதாக தான் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிக முகவர் (BC) மையங்கள் வரவுள்ளன. இதன் மூலம் மக்கள் நேரடியாக UPI மூலம் பணம் எடுக்கலாம். இதற்காக தான் என்பிசிஐ, இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) அனுமதி கோரியுள்ளது.
இப்போது யுபிஐ அடிப்பையிலான பணம் எடுக்கும் வசதி சில ஏடிஎம்கள் மற்றும் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே உள்ளது. அதுவும் நகரங்களில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000 வரம்பு உள்ளது. கிராமங்களில் ரூ.2,000 வரை எடுக்கலாம். ஆனால் புதிய திட்டத்தின்படி, BC மையங்களில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.10,000 வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதுவும் வங்கி கிளைகள் அல்லது ஏடிஎம் மெஷின் இல்லாத பகுதிகளில் வங்கிகளின் சார்பாக சேவைகளை வழங்கும் உள்ளூர் பிரதிநிதிகளே வணிக முகவர்கள். இவர்கள் கடைக்காரர்கள், தொண்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்களாக இருக்கலாம். முன்பு ஆதார் அல்லது டெபிட் கார்டு மூலம் இவர்கள் வழியாக மக்கள் பணம் எடுத்து வந்தனர்.

ஆனால் புதிய அமைப்பில் ஒவ்வொரு BC மையத்திற்கும் ஒரு UPI QR வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள UPI செயலி மூலம் அந்த குறியீட்டை ஸ்கேன் செய்து, தேவையான தொகையைப் பணமாகப் பெறலாம். டெபிட் கார்டு அல்லது கைரேகை தேவையில்லை என்பதால் இது மைக்ரோ ஏடிஎம்களை விட எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கைரேகை மூலம் பணம் எடுப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கும், டெபிட் கார்டு பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கும், ஏடிஎம்கள் இல்லாத சிறிய கிராமங்கள், நகரங்களில் வசிப்பவர்களுக்கும் இந்த புதிய வசதி மிகவும் உதவியாக இருக்கும். பின்பு விரைவில் கொண்டுவரப்படும் இந்த புதிய வசதி மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எளிதாகப் பணம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications