களைகட்டும் WhatsApp க்ரூப்புகள்.. ஒரே நேரத்துல 32 பேர்.. சைலன்ட் ஆக அறிமுகமான புதிய வசதி!
மீம்ஸ் ஷேர் செய்வது, வாய்ஸ் நோட்களை அனுப்புவது, வீடியோ கிளிப்புகளை பகிர்வது என.. பொதுவாகவே பெரும்பாலான வாட்ஸ்அப் க்ரூப்புகள் கலகலப்பாகவே இருக்கும். அவைகளை மேலும் கலகலப்பாக்கும் வன்ணம், வாட்ஸ்அப் நிறுவனமானது சத்தமின்றி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன வசதி? இதோ விவரங்கள்:
வாட்ஸ்அப் (WhatsApp) அதன் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனில் (Latest beta version) ஒரு புத்தம் புதிய வாய்ஸ் சாட் அம்சத்தை (New voice chat feature) அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு க்ரூப்பில் நடக்கும் ஆடியோ செக்ஷனில் (Audio Session) ஒரே நேரத்தில் 32 பேர் வரை ஈடுபட அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் மற்றும் அறிமுகம் செய்யப்படப்போகும் புதிய அம்சங்களை பற்றி துல்லியமான தகவல்களை வழங்கும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாய்ஸ் சாட் அம்சமானது வாட்ஸ்அப் 2.23.16.19 பீட்டா வெர்ஷனில் அணுக கிடைக்கிறது.
அதாவது இது ஆண்ட்ராய்டு டெஸ்டர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது; இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமான சோதனையில் உள்ளது. எல்லாம் சரியாக இருந்தால், இந்த அம்சம் கூடிய விரைவில் பீட்டா வெர்ஷனில் மட்டுமின்றி அணைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த புதிய அம்சத்தின் வழியாக வாட்ஸ்அப் நிறுவனமானது டெலிகிராம், டிஸ்கார்ட், ஸ்லாக்கின் ஹடில்ஸ் மற்றும் மெட்டாவிற்கு சொந்தமான மெசஞ்சர் போன்ற பிரபலமான தளங்களுடன் போட்டியிட முயற்சிப்பதையும், அவைகளுக்கு சமமான அம்சங்களை அறிமுகம் செய்வதில் முனைப்புடன் இருக்கிறது என்பதையும் வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது.
புதிய வாய்ஸ் சாட் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி? நீங்கள் மேற்குறிப்பிட்ட வாட்ஸ்அப் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் க்ரூப் சாட்களுக்குள் ஒரு தனித்துவமான அலைவடிவ ஐகானை (Waveform Icon) காண்பீர்கள். குறிப்பிட்ட அம்சம் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் இருந்தால் மட்டுமே மற்றும் உங்கள் க்ரூப் உடன் இந்த அம்சம் இணக்கமானதாக இருந்தால் மட்டுமே இந்த ஐகான் தெரியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.
இந்த அம்சத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது. வெறுமனே நீங்கள் அந்த அலைவடிவ ஐகானை கிளிக் செய்தால் போதும். இது பிரத்யேக வாய்ஸ் சாட் இன்டர்பேஸிற்கு வழிவகுக்கும்; இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும் க்ரூப்பில் உள்ள எவரும் - அதிகபட்சம் 32 பங்கேற்பாளர்கள் வரை - உரையாடலில் தடையின்றி இணைந்து பேச தொடங்கலாம்.
வழக்கமான க்ரூப் கால்களை போலன்றி, இந்த புதிய அம்சமானது அனைவரின் போன்களிலுமே ஒரே நேரத்தில் ரிங் ஆகாது. மேலும் அனைத்து பங்கேற்பாளர்களும் வெளியேறிய பிறகும் கூட, இந்த வாய்ஸ் சாட் சேஷன் ஆனது நீடிக்கும்; ஆனால் அது ஒரு மணி நேரத்திற்கு பிறகு தானாகவே முடிவடையும்.
வாட்ஸ்அப்பில் உள்ள வாய்ஸ் சாட்கள் ஆனது டீபால்ட் ஆகவே என்க்ரிப்ட் செய்யப்பட்டு, பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதால், புதிய வாய்ஸ் சாட் அம்சத்திலும் தனியுரிமைக்கான எந்த சிக்கலும், ஆபத்தும் இருக்காது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்துவது வாட்ஸ்அப் தளம் அல்ல.
கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே டெலிகிராம் ஆப்பில் இதேபோன்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் சொல்லப்போனால் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை மிகவும் தாமதமாகவே வெளியிட்டுள்ளது. இருந்தாலும் கூட வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி அதன் மிகப்பெரிய பயனர் தளத்தை குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இது பயனர்களை மிகவும் ஆழமான மற்றும் ஈர்க்கக்கூடிய விதத்தில் மற்றவர்களுடன் ஒன்றிணைக்கும் ஒரு அம்சமாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் வாட்ஸ்அப் நிறுவனமானது உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது, மற்றும் உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மெசேஜிங் ஆப்களில் ஒன்றாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








