ஆகஸ்ட் 1 முதல் அமல்.. புதிய UPI விதிகள்.. பேங்க் பேலன்ஸ், ஆட்டோபே.. என்னென்ன மாறுது?
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில புதிய யுபிஐ விதிகள் (New UPI Rules From August 1) அமலுக்கு வருகின்றன. எனவே நீங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) அல்லது வேறு ஏதேனும் யுபிஐ ஆப்களை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், ஆகஸ்ட் 1 முதல் என்ன மாதிரியான மாற்றங்கள் வருகிறது என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
யுபிஐ சேவையை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) ஆனது, யுபிஐ சிஸ்டமில் அழுத்தத்தை குறைக்கவும், யுபிஐ வழியிலான பேமண்ட் தாமதங்கள் மற்றும் தோல்வியுற்ற யுபிஐ பரிவர்த்தனைகள் போன்ற சிக்கல்களை குறைக்க புதிய வரம்புகளை அறிமுகப்படுத்துகிறது.

அதாவது இந்த மாற்றங்கள் உங்களுடைய உள்ளூர் மளிகைக் கடையில் அல்லது காய்கறி கடைகளில், நீங்கள் எவ்வாறு யுபிஐ வழியிலான பணப்பரிவர்தனையை செய்கிறீர்கள் என்பதை பாதிக்காது, ஆனால் பேலன்ஸ் செக் செய்வது, ஸ்டேட்டஸ் ரெப்ரெஷ்கள் மற்றும் பலவற்றில் புதிய வரம்புகள் வருகின்றன
ஆகஸ்ட் 1 முதல் அப்படி என்ன புதிய யுபிஐ பரிவர்த்தனை வரம்புகள் அமலுக்கு வருகின்றன? ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், யுபிஐ பயனர்கள் தங்கள் யுபிஐ ஆப் வழியாக தங்களுடைய பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
இதேபோல், ஒரு பயனர் தன்னுடைய மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை பார்க்கக்கூடிய எண்ணிக்கை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே இருக்கும். யுபிஐ சிஸ்டமில் தேவையற்ற டிராஃபிக்கை குறைக்க இந்த புதிய வரம்புகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் அதிக அளவிலான யுபிஐ பயன்பாட்டின் போது மந்தநிலை மற்றும் செயலிழப்புகள் குறையும் என்று என்பிசிஐ நம்புகிறது.
யுபிஐ ஆட்டோபே அம்சங்களில் மாற்றங்கள் வருகிறதா? ஆம். என்பிசிஐ ஆனது யுபிஐ ஆட்டோபே பரிவர்த்தனைகளுக்கு நிலையான நேர இடைவெளிகளை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, தானியங்கி கட்டணங்கள், சந்தாக்கள், பயன்பாட்டு பில்கள் அல்லது இஎம்ஐ-க்கள் போன்ற திட்டமிடப்பட்ட கட்டணங்கள் நாள் முழுவதும் சீரற்ற முறையில் நடக்காமல், குறிப்பிட்ட நேர இடைவெளியில் செயல்படுத்தப்படும். இந்த மாற்றம் யுபிஐ நெரிசலை குறைக்கவும், வழக்கமான பயன்பாட்டு நேரங்களில் ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்தவும் உதவும் என்று எதிபார்க்கப்படுகிறது
மேற்கண்ட மாற்றங்கள் அனைத்து யுபிஐ பயனர்களையும் பாதிக்குமா? கண்டிப்பாக. நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை யுபிஐ சேவையை பயன்படுத்தினாலும் சரி அல்லது 20 முறை பயன்படுத்தினாலும் சரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரம்புகள் அனைத்து தளங்களிலும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும்.
ஒருவேளை நீங்கள் தொடர்ச்சியான முறையில் உங்கள் பேமண்ட் ஸ்டேட்டஸ்-ஐ ரெஃப்ரெஷ் செய்யவில்லை என்றால் அல்லது அடிக்கடி உங்களுடைய பேங்க் பேலன்ஸைசரிபார்க்கவில்லை என்றால், ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளால் நீங்கள் அதிக வித்தியாசத்தை கவனிக்க வாய்ப்பில்லை. இந்த அப்டேட்கள் முக்கியமாக உங்களை தொந்தரவு செய்யாமல் சிஸ்டமை மீண்டும்-மீண்டும் கோரிக்கைகளால் ஓவர்லோட் செய்யும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளன.
அதிகபட்ச யுபிஐ கட்டண வரம்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா? தற்போதைக்கு யுபிஐ கட்டண வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. பரிவர்த்தனை வரம்புகள் அப்படியே தான் உள்ளன - பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சம் வரை என்கிற வரம்பு உள்ளது. சுகாதாரம் அல்லது கல்வி போன்ற சில வகைகளுக்கு ரூ. 5 லட்சம் வரை என்கிற வரம்பு உள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரும் மாற்றங்கள் இந்த வரம்புகளில் எந்த மாற்றங்களையும் கொண்டுவராது!


Click it and Unblock the Notifications








