100 ரூபாயோ 1000 ரூபாயோ.. UPI பணம் அனுப்ப புது ரூல்.. பேங்க் அக்கவுண்ட் இருக்குற எல்லோருக்கும் பொருந்தும்!
இன்று, ஜூன் 1 ஆம் தேதி முதல் யுபிஐ (UPI) என்கிற யுனிஃபைடு பேமண்ட் இன்டர்பேஸ் (Unified Payments Interface) சேவையில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. ஆக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக பணம் அனுப்புபவர்கள் இதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
அதென்ன புதிய விதி? 2026 ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய என்பிசிஐ (NPCI) விதியின் படி, யுபிஐ ஆப்கள் வழியாக பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, நீங்கள் உங்கள் பின் நம்பரை (PIN Number) உள்ளிடுவதற்கு முன்பு, யுபிஐ ஆப்கள் ஆனது அந்த பணத்தை பெறவுள்ள பெறுநரின் சரியான பெயரை, அதாவது அவருடைய வங்கியில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வ பெயரை காண்பிக்க வேண்டும்.

இனி புனைப்பெயர்களுக்கு வேலை இல்லை: ஜூன் 1 முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், யுபிஐ ஆப்களால் உருவாக்கப்பட்ட குறிச்சொற்கள் (App-generated tags), வணிகர் வர்த்தக பெயர்கள் (Merchant trade names) அல்லது தனிப்பயனாக்கப்பட்ட / பயனர் வரையறுத்த மாற்று பெயர்கள் (Customized / User-defined aliases) இனி காட்டப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏன் இந்த திடீர் மாற்றம்? முதல் மற்றும் முக்கிய காரணம் - நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்பதை இது உறுதிசெய்கிறது, இதன் மூலம் நீங்கள் தற்செயலாக, தவறான நபருக்கு பணம் அனுப்புவதும் அல்லது போலி பெயர்களை கொண்ட மோசடிகளில் சிக்குவதும் தடுக்கப்படும். இந்த மாற்றம் - அனைத்து யுபிஐ ஆப்களுக்கும் (ஜிபே, போன்பே, பேடிஎம் போன்றவை) தானாகவே செயல்படுத்தப்படும்.
ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் மோசடி (Digital fraud) மற்றும் தற்செயலான பணப் பரிமாற்றங்களை (Accidental money transfers) தடுப்பதற்காக, என்பிசிஐ என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது இந்த புதிய யுபிஐ விதியை செயல்படுத்தி உள்ளது.
நேரடியாக வங்கியின் தரவுத்தளத்தில் இருந்து: புதிய யுபிஐ விதியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இதன் கீழ் அதிகாரப்பூர்வ வங்கி பதிவுகள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும். இதற்காக வங்கியின் தரவுத்தளத்திலிருந்து நேரடியாக தரவுகள் பெறப்படும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த இடத்தில் தான் - சரிபார்க்கப்படாத வணிகர் வர்த்தக பெயர்கள், பயனரால் வரையறுக்கப்பட்ட ஆப் ஐடிகள், புனைப்பெயர்கள் அல்லது உங்கள் காண்டாக்ட் பட்டியலில் சேமிக்கப்பட்ட பெயர்கள் முழுமையாக தவிர்க்கப்படும்
இரண்டு வகை பரிமாற்றங்கள்: இந்த "பரிவர்த்தனைக்கு முந்தைய பெயர் சரிபார்ப்பு" ஆனது பியர்-டு-பியர் (பி2பி) மற்றும் பியர்-டு-மெர்ச்சன்ட் (பி2எம்) ஆகிய இரண்டு பரிமாற்றங்களுக்கும், அனைத்து யுபிஐ ஆப்களுக்கும் பொருந்தும். கடையின் முகப்பு பெயர் அல்லது வர்த்தக பெயர், வங்கிக் கணக்கு பதிவேட்டு பெயர்களிலிருந்து வேறுபடும் வணிகர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள், பணம் செலுத்துவதில் ஏற்படும் குழப்பங்களை தடுக்க, உடனே அக்கவுண்ட்களை சின்க் (Sync) செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
வேறு என்னென்ன புதிய விதிகள் ஜூன் மாதத்தில் அமலுக்கு வரலாம்? இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organisation) ஆனது யுபிஐ மூலம் நேரடியாக வருங்கால வைப்பு நிதியை எடுக்க அனுமதிக்கும் சோதனைகளை இறுதி செய்து வருகிறது. இது, பாரம்பரிய பரிவர்த்தனைகளுக்கு ஒரு வேகமான மாற்றை அறிமுகப்படுத்துகிறது.
இதன் விளைவாக பாரம்பரிய வங்கி சேவைகள் சற்று அதிக செலவு மிக்கதாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது பல வணிக வங்கிகள் தங்களின் பரிவர்த்தனை கட்டமைப்புகளைச் சரிசெய்து வருகின்றன. இதன் பொருள், ஏடிஎம் (ATM) என்கிற தானியங்கி பண இயந்திரங்களின் வழியாக - பணம் எடுத்தல் (cash withdrawals), மினி ஸ்டேட்மென்ட் கோரிக்கைகள் (mini-statement requests) மற்றும் பேலன்ஸ் விசாரணைகளுக்கு (balance enquiries) அதிக கட்டணங்கள் விதிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications