14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் தலையில் அடுத்த இடி.. இன்னும் விலை ஏறுமாம்.. 3-4 ஆண்டு ஆகுமாம்!
உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா அல்லது நிரந்தர சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாக தெரியாததால், பாதிக்கப்பட்ட உலகளாவிய எல்பிஜி விநியோக சங்கிலிகளை மீட்டெடுக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று ஒரு மூத்த அரசு அதிகாரி கூறி உள்ளார்.
இந்தியா தனது எல்பிஜி விநியோகத்திற்காக மேற்கு ஆசியாவை பெரிதும் சார்ந்துள்ளதும், அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட முற்றுகை மற்றும் பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ஈரான் தாக்குதல்களால் இந்த விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதும் நாம் அறிந்ததே. ஆனால் அறியாத விஷயம் என்னவென்றால் - எப்போது இதெல்லாம் சரியாகும் என்பது தான்!

மணிகண்ட்ரோலின் சமீபத்திய அறிக்கையின் படி "பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விநியோகத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகலாம், மேலும் அது நீண்ட காலம் நீடிக்கவும் வாய்ப்புள்ளது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியாவின் அதிகரித்து வரும் இறக்குமதி அபாயங்கள் மற்றும் செலவு அழுத்தங்களையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி சார்புத்தன்மை அதிகமாகவே உள்ளது; அதன் நுகர்வில் சுமார் 60 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த விநியோகங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்பட்டன. மார்ச் 24 நிலவரப்படி, வளைகுடா இறக்குமதிகளின் பங்கு 55 சதவீதமாக குறைந்துள்ளது. இது, விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கிறது.
நீண்ட பயணம் காத்திருக்கிறது: ரூபிக்ஸ் டேட்டா சயின்சஸ் மற்றும் வயானா டிரேட்எக்ஸ்சேஞ்ச் ஆகியவற்றின் ஏப்ரல் மாத அறிக்கையின்படி, விநியோக பாதைகளை மாற்றுதல் மற்றும் மாற்று கொள்முதல்களுக்கு பிறகும், விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள் 40-50 சதவீதம் வரை நீடிக்கக்கூடும். அறியாதோர்களுக்கு - ரூபிக்ஸ் டேட்டா சயின்சஸ் ஒரு இடர் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு நிறுவனமாகும், அதேசமயம் வயானா டிரேட்எக்ஸ்சேஞ்ச் ஒரு விநியோக சங்கிலி நிதி மற்றும் வர்த்தக தரவுத் தளமாகும்.
பற்றாக்குறையை குறைப்பதற்கான மாற்று கொள்முதல் வழிகளை ஆராய்ந்து வரும் அதே வேளையில், வீட்டு உபயோகத்திற்கான விநியோக தொடர்ச்சியை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும் அந்த மூத்த அரசு அதிகாரி கூறியுள்ளார். கோவிட் காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்று ஏற்பாடுகள், விநியோக பாதைகளின் தாக்கத்தை தணிக்க மீண்டும் உதவக்கூடும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்துதல், சரக்குகளை மாற்று பாதைகளில் அனுப்புதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தேவையை நிர்வகித்தல் ஆகியவைகள் - அரசாங்கத்தின் மாற்று ஏற்பாடுகள் ஆகும். இதோடு நுகர்வு முறைகளை நிர்வகிப்பதிலும், வீடுகளில் விநியோக பாதைகள் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும்.
குறைந்த சேமிப்புத்திறன், அதிக விலைகள்: ஆண்டுக்கு சுமார் 33 மில்லியன் டன் எல்பிஜி தேவையும், மார்ச் மாத நடுப்பகுதியில் சுமார் 15 நாட்கள் நுகர்வுக்கு மட்டுமே சேமிப்புத் திறன் உள்ள நிலையில், மூலப்பொருட்களை பெறுவதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், குறுகிய கால விநியோக அபாயங்களையும் விலை ஏற்ற இறக்கங்களையும் அதிகரிக்கிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது. மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து உள்நாட்டு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.60 உயர்ந்துள்ளதும், அதே காலகட்டத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.115 அதிகரித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
விலை இன்னும் உயரும்: ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இணைந்து, 2025 நிதியாண்டில் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் எல்பிஜி தேவையில் 92 சதவீதத்தை வழங்கின. ஈரானின் தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம் 41 சதவீதமும், கத்தார் 22 சதவீதமும் இறக்குமதி செய்தன.
இந்த இடையூறு சரக்கு கட்டணங்களையும் காப்பீட்டு பிரீமியங்களையும் அதிகரித்துள்ளது, இது எல்பிஜி விலைகளை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுத்திகரிப்பாளர்களை எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடும் அவசரகால நடவடிக்கைகள், மொத்த சுத்திகரிப்பு லாப வரம்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
உயர்ந்த எல்பிஜி விலைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் போன்ற வணிகப் பயனர்களையும் பாதிக்க்கும். மேலும், இது உள்நாட்டு சிலிண்டர்களை வழங்கும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மீதான மானிய அழுத்தங்களையும் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் நிகர ஏற்றுமதியாளராக இருந்தபோதிலும், எல்பிஜி, நாஃப்தா மற்றும் எரிஎண்ணெய் போன்ற எரிபொருட்களுக்காக இந்தியா தொடர்ந்து இறக்குமதியையே சார்ந்துள்ளது. இது, உலகளாவிய விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோக தடைகளுக்கு இந்தியாவை ஆளாக்குகிறது!


Click it and Unblock the Notifications








