சுங்கச் சாவடிகளில் புதிய விதிகள்.. இந்த தவறு செய்தால் 4 மடங்கு கட்டணம்! வாகன ஓட்டிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
கடந்த சில மாதங்களில் இந்தியாவில் சுங்கக் கட்டணம் தொடர்பான பல மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் (New Toll Rule) அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கவும் அரசு தரப்பில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சரக்குப் போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

புதிய விதிகள்
அதாவது லாரி, டிம்ப்பர் அல்லது டிரெய்லர் போன்ற எந்தவொரு சரக்கு வாகனமும் அதன் கொள்ளளவை விட அதிகமாகச் சுமையை ஏற்றி சென்றால் நிர்ணயிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தைப் போல் நான்கு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் நேற்று, ஏப்ரல் 15 முதல் நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக சுமை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூலை முறைப்படுத்துவதையும், அமலாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகித நிர்ணயம் மற்றும் வசூல்) நான்காவது திருத்த விதிகள், 2026 விதிமுறையை அறிவித்துள்ளதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 10 சதவீதம் வரை அதிக சுமையை ஏற்றிச் சென்றால், அது கூடுதல் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதே ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிக சுமையை ஏற்றிச் சென்றால், அது நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியை விட இரு மடங்கு செலுத்த வேண்டும். அதேபோல் ஒரு வாகனம் அதன் கொள்ளளவை விட 40 சதவீதத்திற்கும் அதிகமாகச் சுமையை ஏற்றிச் சென்றால் அது நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரியை விட நான்கு மடங்கும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ
மேலும் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக சுங்க கட்டணத்தைச் செலுத்தும் முறை நிறுத்தப்பட்டது. அதாவது ஏப்ரல் 10 முதல் கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின்படி, ஃபாஸ்டேக் மற்றும் யுபிஐ (UPI) போன்ற டிஜிட்டல் நடைமுறைகளில் மட்டுமே கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை சுங்கச்சாவடி கடக்க கூடிய வாகனங்களில் ஃபாஸ்டேக் இல்லை என்றாலும் யுபிஐ பயன்படுத்தி சுங்க கட்டணத்தைச் செலுத்த முடியும். ஆனாலும் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கும் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொக்கமாக பணம் கொடுத்தால் சுங்கச்சாவடியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே நீங்கள் உங்களது வாகனத்தில் ஃபாஸ்டேக் இருப்பதையும் அந்த கணக்கில் பணம் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் யுபிஐ கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு வழிகளும் இல்லை என்றால் ரொக்கமாக பணம் கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதுவும் சுங்கச்சாவடியில் செல்லும் வாகனம் ஃபாஸ்டேக், யுபிஐ என இரண்டு வழிகளிலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உங்களது மொபைல் எண்ணுக்கு கட்டணம் குறித்த தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த கட்டணத்தை நீங்கள் மூன்று நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
கார், ஜீப், வேன் போன்ற தனியார் வாகனங்களுக்கு ஓராண்டுக்கான ஃபாஸ்டேக் பாஸ் வழங்கப்படுகிறது. இதன் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.3000 இருந்த ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம் இப்போது ரூ.3075-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது குறிப்பாக இந்த பாஸ் இருந்தால் ஒரு வருடத்திற்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தாமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








