ஏப்.1 முதல் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? புது TDS ரூல்ஸ், புது வருமான வரி சட்டத்தால் வரும் மாற்றங்கள்!
நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திலிருந்து, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு மாற ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? பல சம்பளதாரர்கள், இந்த மாற்றங்கள் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் உண்மையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குழப்பத்தில், யோசனையில் உள்ளனர். இந்த மாற்றங்களால் உடனடியாகவும், நடைமுறையிலும் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கப்போவது - சம்பளத்தின் மீதான டிடிஎஸ் (TDS) தான். இது கையில் கிடைக்கும் சம்பளத்தை நேரடியாக பாதிக்கும்.

மூன்று கேள்விகளும், அதற்கான பதில்களும்: இந்த மாற்ற காலகட்டத்தில், எம்பிளாயர்கள் டிடிஎஸ்-ஐ எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் தொகுப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2026 மற்றும் அதற்கு பிறகான எதிர்பாராத நிகழ்வுகளை தவிர்க்க, ஒவ்வொரு ஊழியரும் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
முதல் கேள்வி: மார்ச் மற்றும் ஏப்ரல் 2026 சம்பளத்திற்கு எந்த சட்டம் பொருந்தும்? 31 மார்ச் 2026 அன்று வழங்கப்பட்ட மார்ச் 2026 மாதத்திற்கான சம்பளம், வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் நிர்வகிக்கப்படும், ஏனெனில் அந்த பணம் 1 ஏப்ரல் 2026 அன்று அல்லது அதற்கு பிறகு வழங்கப்பட்டது.
30 ஏப்ரல் 2026 அன்று வழங்கப்பட்ட ஏப்ரல் 2026 மாதத்திற்கான சம்பளம், வருமான வரி சட்டம், 2025-இன் கீழ் நிர்வகிக்கப்படும், ஏனெனில் அந்த பணம் 1 ஏப்ரல் 2026 அன்று அல்லது அதற்கு பிறகு வழங்கப்பட்டது. எனவே, நீங்கள் சம்பளம் பெற்ற மாதம் அல்ல, மாறாக நீங்கள் சம்பளத்தை பெறும் தேதியே பொருந்தக்கூடிய வரி சட்டத்தைத் தீர்மானிக்கிறது.
இரண்டாவது கேள்வி: இந்த மாற்றத்தின் போது எம்பிளாயர்கள் டிடிஎஸ்-ஐ எவ்வாறு கையாள்வார்கள்? 2025-26 நிதியாண்டின் சம்பளத்திற்கு (மார்ச் 2026 வரை செலுத்தப்பட்டது): டிடிஎஸ் கடமைகள் பழைய சட்டத்தின் பிரிவு 192-இன் படி இருக்க வேண்டும். 2026-27 வரி ஆண்டின் சம்பளத்திற்கு (ஏப்ரல் 2026 முதல் செலுத்தப்பட்டது): டிடிஎஸ் கடமைகள் புதிய சட்டத்தின் பிரிவு 392(1)-இன் படி இருக்க வேண்டும்.
இதன் பொருள், புதிய வரி ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் டிடிஎஸ் "ரீசெட்" (Reset) செய்யப்படும், இது உங்கள் மாதாந்திர பிடித்தங்களை சற்றே மாற்றக்கூடும். 2026-27 வரி ஆண்டிற்கான உத்தேச வருமானம், பிடித்தங்கள் மற்றும் வரி விதிப்பு முறையை கருத்தில் கொண்டு, எம்பிளாயர் புதிய வரி ஆண்டிற்காக ஏப்ரல் 1, 2026 முதல் டிடிஎஸ் கணக்கீட்டை மீண்டும் அமைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
மூன்றாவது கேள்வி: உங்கள் இன்வெஸ்ட்மென்ட் டிக்ளரேஷன் எந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்? 2026-27 நிதியாண்டிற்கு, உங்கள் இன்வெஸ்ட்மென்ட் டிக்ளரேஷன் புதிய சட்டத்தைப் (வருமான வரிச் சட்டம், 2025) பின்பற்ற வேண்டும். 80சி போன்ற பழைய பிரிவுகள், புதிய பிரிவு குறிப்புகள் மற்றும் அட்டவணைகளால் மாற்றப்படும்.
2026-27 நிதியாண்டிற்கான இன்வெஸ்ட்மென்ட் டிக்ளரேஷன், வருமான வரிச் சட்டம், 2025 இன் விதிகளை குறிப்பிட வேண்டும். உதாரணமாக, பழைய சட்டத்தின் பிரிவு 80சி-இன் கீழ் உள்ள கழிவுகள், இனி வருமான வரி சட்டம், 2025-இன் பிரிவு 123 உடன் சேர்த்துப் படிக்கப்படும் அட்டவணை XV ஆக குறிப்பிடப்படும்.
ஏப்ரல் 2026 முதல் புதிய பிரிவு எண்களை பிரதிபலிக்கும் வகையில், எம்பிளாயரின் ஊதிய அமைப்பு புதுப்பிக்கப்பட வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. சம்பள காலம் மட்டுமல்ல, சம்பளம் வழங்கப்படும் நேரமும் எந்த சட்டம் பொருந்தும் என்பதை தீர்மானிக்கிறது. இது பழைய மற்றும் புதிய வரி சட்டங்கள் இரண்டும் நடைமுறைக்கு வரும் ஒரு குறுகிய, ஆனால் முக்கியமான கால இடைவெளியை உருவாக்குகிறது!


Click it and Unblock the Notifications








