சென்னையில் ஜப்பான் ஸ்டைலில் புதிய டிராபிக் சிக்னல் அறிமுகம்! அடுத்து தமிழக முழுவதும் இதுதான்!
தற்போது தமிழகத்தில் உள்ள சிக்னல் கம்பங்களில் எல்இடி பொருத்திய சிக்னல் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த சிக்னல் விளக்குகள் வாகன ஓட்டிகளுக்குச் சரியாகத் தெரிவதில்லை என்ற பல காலமாகப் புகார் அளிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாகச் சென்னை போன்ற அதிக டிராபிக் நெரிசல் இருக்கும் நகரங்களில், தூரத்திலிருந்து வருபவர்களுக்கும் சிக்னல் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாகக் கூறப்பட்டு வருகிறது.

இதற்கான தீர்வை தமிழக போக்குவரத்துக்குக் கழகம் தற்பொழுது ஜப்பான் ஸ்டைலில் களமிறக்கியுள்ளது. தற்போது மெரினாவை நவீனப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சென்னை காந்தி சிலை சிக்னலில் இந்த புதிய எல்இடி சிக்னல் கம்பங்களை தற்பொழுது சென்னை போக்குவரத்து போலீசார் நிறுவியுள்ளனர். இந்த புதிய சிக்னல் போஸ்ட் லேம்ப்களை சென்னை காவல்துறை ஆணையர் துவக்கிவைத்துள்ளார்.

தற்பொழுது பயன்படுத்தி வரும் சிக்னல் கம்பங்களில் உள்ள வண்ண விளக்குகள் மட்டுமே சிக்னலிற்கு ஏற்றவாறு ஒளிரும், ஆனால் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிக்னல் கம்பங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல், ஒட்டுமொத்தமாக சிக்னல் கம்பமே ஒளிரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்னலுக்கு ஏற்றார் போல் முழு கம்பமும் அதே நிறத்தில் ஒளிரும் படி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிக்னல்கள் பெரும்பாலும் ஜப்பான் தலைநகரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதற்கு பின்னர் பிற உலக நாடுகளிலும் இந்த சிக்னல் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சிக்னல் கம்பங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம், மக்கள் தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல் விழுந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும் வகையில் அமைந்துள்ளது.

இந்த எல்இடி சிக்னல் கம்பங்களில் பச்சை நிற சிக்னல் விழும் நேரத்தில் கோ (GO) என்ற அறிவிப்பு பலகை ஒளிருகிறது, ஆரஞ்சு நிற சிக்னல் விழும் பொழுது லிசன் (LISTEN) என்ற அறிவிப்பு பலகை ஒளிருகிறது, அதேபோல் சிவப்பு நிற சிக்னல் விழும் நேரத்தில் ஸ்டாப் (STOP) என்ற அறிவிப்பும் ஒளிருகிறது. சிக்னல் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதைக் காட்ட வழக்கம்போல் டைமர் கிளாக் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

சோதனையின் முதற்கட்டமாகச் சென்னையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஜப்பான் ஸ்டைல் டிராபிக் சிக்னல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால் அதிக இடங்களில் நிறுவப்படும் என்று போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது. நிச்சயம் இந்த புதிய சிக்னல் கம்பங்கள் தமிழகம் முழுதும் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications